ஆலயங்களின் அவசியம் என்ன?

'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்பது ஒளவையாரின் கூற்று. ஆண்டவன் பற்பல ஊர்களில் கோவில் கொண்டுள்ளான். ஒரே இடத்தில் கோவில் கொண்டால் என்ன?

அதற்கு காரணம் இருக்கிறது. மக்கள் ஒரே இடத்தில் இருக்காமல் பற்பல இடங்களுக்குச் சென்றால்தான் பொது அறிவு வளரும். மனமகிழ்ச்சியும் கிடைக்கும். வெறுமனே யாரும் பணம் செலவழித்துக் கொண்டு செல்ல மாட்டார்கள். ஏதாவது ஆதாயம் கிடைக்காதா என்றுதான் எதிர்பார்பார்கள். ஆனால் கோவில் என்றால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்வார்கள். ஏனெனில் புண்ணியம் என்னும் ஆதாயம் கிடைக்கிறதல்லவா? ஆனால் எல்லா ஆலயங்களுக்கும் எல்லோராலேயும் செல்ல முடியாது. அவர்களை அந்த ஆலயங்களுக்கு இலவசமாக அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் அழைத்துச்செல்ல சென்னை ஆலயங்கள் வார இதழ் வெகு விரைவில் வெளிவரவுள்ளது.

இதன் முக்கிய குறிக்கோள்கள்
சென்னையில் உள்ள அனைத்து ஆலயங்கள் மற்றும் அங்கு நடைபெறும் திருவிழா பற்றிய விவரங்களை வாரந்தோறும் வெளியிடுதல். அந்த ஆலயங்களுக்கு பக்தர்களை இலவசமாகவோ அல்லது மிக மிக குறைந்த கட்டணத்திலோ அழைத்து செல்லுதல்.

அந்த ஆலயங்களில் பல கைங்கர்யங்களை மேற்கொள்ளுதல் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் பல பக்தி நெறி நிகழ்ச்சிகளை நடத்துதல்.

பக்தர்கள் குழு
இந்த இதழுக்கு தகவல் சேர்க்கவும் ஒவ்வொரு ஆலயத்திற்கு மேற்கொள்ளவேண்டிய கைங்கர்யங்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும் ஒவ்வொரு இறைவனுடைய பக்தர்கள் குழு அமைக்கப்படவுள்ளது. பெருமாள் பக்தர்கள் குழு சிவன் பக்தர்கள் குழு, முருகர் பக்தர்கள் குழு, ஆஞ்சநேயர் பக்தர்கள் குழு , ராகவேந்திரர் பக்தர்கள் குழு ஐயப்பன் பக்தர்கள் குழு, திவ்ய நாம சங்கீர்த்தன குழு இப்படி எல்லா தெய்வங்களுக்கும் பக்தர்கள் குழு ஒவ்வொரு ஊரிலும் அமைக்கப்படும். இந்தக்குழுக்களை பக்தர்களே அமைத்து கொள்ளலாம். இவ்வாறு அமைப்பதில் நிறைய ஆதாயங்கள் உண்டு. அது சென்னை ஆலயங்கள் முதல் இதழில் வெளியிடப்படும்.


இந்த குழுக்களை உங்கள் ஊரில் அமைக்க உடனடியாக எங்களை அணுகவும். மேலும் விவரங்களுக்கு நேரடியாகவோ தொலைபேசி மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ தொடர்பு கொள்ளுங்கள்.

- பதிப்பகத்தார்


நாம சங்கீர்த்தனத்தின் மகிமை

இப்பொழுது பல இடங்களில் திவ்ய நாம சங்கீர்த்தனங்கள் நடைபெறுகின்றன. இதனுடைய அடிப்படைத் தத்துவம் மற்றும் மகிமையை இங்கே பார்க்கலாம்.
எல்லோரும் விரும்புவது கடைசி காலத்தில் இறைவனுடன் ஐக்கியமாக வேண்டும், மீண்டும் பிறவா வரம் வேண்டும் என்பதே. ஆனால் அதற்கு கடும் தவம் புரியவேண்டும். ஆனால் கலியுகத்தில் இயந்திரமயமான வாழ்க்கையில் இருக்கும் நம்மால் அவ்வாறு தவம் புரிய முடியுமா? அதனால் இறைவன் நமக்காக விதிமுறையை தளர்த்திக்கொள்கிறார். என்னவெனில், Ôகலியுகத்தில் எனது பெயரைச் சொன்னாலே போதும், முக்தி கிடைத்துவிடும்Õ என்று. இது ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை ஒரு ரூபாய்க்கு விற்பது போன்றது போலத்தானே?

ஆனால் நம்மில் பலர் அந்த ஒரு ரூபாய் கொடுக்கக்கூட மனமில்லாமல், அந்தப் பொருள் கிடைக்கவில்லையே என்று புலம்புகிறார்கள். அப்படியும் பகவான் அவர்களை விடவில்லை. எனது நாமாவை சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. அதை காதாலே சற்று கேள். இது எப்படி இருக்கிறது என்றால், ஒரு ரூபாய் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, அந்த ஒரு ரூபாயை கண்ணிலாவது காட்டு என்று கூறுவதைப் போல் உள்ளது.

பார்த்தீர்களா, இந்த அளவு இறைவன் நமக்காக இறங்கி வருகிறான். ஆகவே பகவானின் நாமத்தை உச்சரிப்போம். உயர்ந்த நிலையை அடைவோம்.
இங்கு ஒரு கேள்வி எழலாம். பகவானின் நாமம் ஒன்று மட்டும் போதும் என்றால் பின் வேத பாராயணம், உபநிஷத்துக்கள், ஸஹஸ்ர நாம பாராயணம், திவ்யப் பிரபந்த பாராயணம் இவைகள் எதற்கு இல்லையா?

உதாரணமாக நாம் பேருந்திற்காக காத்திருக்கிறோம். வரக்கூடிய பேருந்துகளெல்லாம் உள்ளே ஏறமுடியாமல் கூட்டமாக வருகின்றன. நேரம் ஆகிக்கொண்டேயிருக்கிறது. காலியாக பேருந்து எதுவும் வருவதாகத் தெரியவில்லை. என்ன செய்கிறோம்? கூட்டமாக இருந்தாலும் பரவாயில்¬ என்று ஒரு கம்பியைப் பிடித்துக்கொண்டு படியில் ஒரு காலை வைத்தாவது ஏறிவிடுகிறோம். அடுத்த நிறுத்தம் வந்தவுடன் சிலர் இறங்க சற்று வசதியாக நிற்க இடம் கிடைக்கிறது. இன்னும் சில நிறுத்தங்கள் வந்தவுடன் பலர் இறங்க, அமருவதற்கு இடம் கிடைத்துவிடுகிறது. ஒரு இடத்திற்கு உடனே போகவேண்டும் என்கிற குறிக்கோளும் நிறைவேறி விடுகிறது.
இதுதான் நாம சங்கீர்த்தனத்தின் தத்துவம். அதாவது 'படியில் ஒரு காலை வைத்து பேருந்தில் ஏறிவிடு. பிறகு நான் இடம் பிடித்துத் தருகிறேன்' என்கிறார் இறைவன்.
ஆன்மீகம் என்னும் பேருந்தில் நுழைய படிக்கட்டில் காலை வைப்பது, பகவான் நாமத்தைக் கூறுவது போல. முழுப் பயணமும் படிக்கட்டிலேயே கழிக்கிறோமா? இல்லையே. உள்ளே வந்து வசதியாக இருக்கையில் அமர முயற்சிக்கிறோம். அது போல் பகவான் நாமாவை சொல்லி ஆன்மீகப் பேருந்தில் ஏறுகிறோம். பிறகு படிப்படியாக முன்னேறி பல நூல்களைப் படித்து உயர்ந்த நிலைக்கு வருகிறோம். ஆக, பகவானின் நாமாவைக் கூறுவது ஆன்மிகப் படிப்பில் முதல் வகுப்பு.

சரி, வீட்டிலேயே நாம் மட்டும் பகவான் நாமாவைக் கூறினால் என்ன? ஒரு பெரிய மண்டபத்தில் எல்லோருடனும் சேர்ந்துதான் சொல்ல வேண்டுமா?
வீட்டிலேயே தொலைக்காட்சிப் பெட்டியில் கிரிக்கெட் பந்தயம் பார்க்கிறீர்கள். ஒரு வீரர் சதம் அடிக்கிறார். அப்பொழுது நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள். அதே சமயம் மைதானத்தில் பார்த்தால் எத்தனை பேர் வயது வேறுபாடின்றி துள்ளிக் குதித்து மகிழ்ச்சிடைகிறார்கள். நீங்கள் வீட்டில் தனிமையில் மகிழ்ச்சிடைகிறீர்கள். இதில் எந்த மகிழ்ச்சி சிறந்தது? நீங்கள் தனிமையில் அடையும் மகிழ்ச்சி உண்மையான மகிழ்ச்சியில்லை. அரங்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் சேர்ந்து மகிழ்கிறோமே அதுதான் உண்மையான மகிழ்ச்சி. ஒரு திரைப்பாடல் இருக்கிறதே, 'தனிமையிலே இனிமை காண முடியுமா?' என்று. தனிமையிலே நீங்கள் பெற்றது ஆனந்தம் என்றால், அரங்கத்தில் பெறுவது பரமானந்தம். மேலும் அனைவருடன் சேர்ந்து அனுபவிக்கும்பொழுது பல விஷயங்களை அறிந்து கொள்கிறோம். பல பெரியவர்களுடன் கலந்து பழகும் வாய்ப்பு கிட்டுகிறது. அதனால் நமது மனம் பக்குவம் அடைந்து ஞானத்தைப் பெறுகிறது. விளைவு விரைவில் பலர் வணங்கும் நிலைமைக்கு உயர்ந்து விடுகிறோம் (இதைத்தான் பெரியவர்கள் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்கிறார்கள்). பார்த்தீர்களா, வெறும் பகவானின் நாமம் மட்டுமே நம்மை எவ்வளவு உயர்த்துகிறது?

சரி, இந்த நாம சங்கீர்த்தனம் எப்படி கேட்க வேண்டும் தெரியுமா? வெறுமனே கச்சேரி கேட்பது போல் அல்ல. முதலில் பாகவதர் பாடும் பொழுது கேட்கவேண்டும். பிறகு வேகமாக நாமாவளி பாடும் பொழுது இரு கைகளையும் மேலே தூக்கி தாளமடிஜீட்டு வேகமாக நாமும் பாட வேண்டும். அது மட்டுமில்லை, அந்த நேரத்தில் அனைவரும் எழுந்து கொண்டு குதித்துக் குதித்து நாமாவளியை வாய்விட்டுப் பாடவேண்டும்.

இது எதற்காக தெரியுமா? இப்பொழுது பலருக்கு மன உளைச்சல் வருகிறது. ஆங்கிலத்தில் பீமீஜீக்ஷீமீssவீஷீஸீ என்பார்கள். அதற்கு மருத்துவரிடம் சென்று ஆயிரக் கணக்கில் செலவு செய்து மருந்து மாத்திரை வாங்கி சாப்பிடுவார்கள். இலவசமான மருத்துவம் நாம சங்கீர்த்தனத்தில் கிடைக்கிறது என்று அவர்கள் அறிவதில்லை.

ஆம். இப்படி துள்ளிக் குதித்து வாய்விட்டு நாமாவளியை பாடும் பொழுது நம்முடைய மனப்பாரம் நிறைய குறைந்து விடுகிறது. இதை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். பல வருடங்களுக்கு முன் ஒரு பத்திரிக்கையில் படித்தது. இப்பொழுது பல இடங்களில் நகைச்சுவை மன்றங்கள் உள்ளன. வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். ஆனால் வெளிநாட்டில் ஒரு மன்றம் அறிக்கிறதாம். அழும் மன்றம். அதில் அனைவரும் கூடி அழுவார்களாம். இது என்ன விந்தையாக இருக்கிறது என்கிறீர்களா?

ஆம். விந்தைதான். 'பாலும் பழமும்' திரைப்படத்தில் 'காதல் சிறகை காற்றினில் விரித்து..' என்கிற பாடலில் ஒரு வரி வரும். 'பிரிந்தவர் மீண்டும் சேரும் பொழுது அழுதால் கொஞ்சம் நிம்மதி' என்று. ஆம், நாம் எத்தனையோ பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு முழிக்கிறோம். அதிலிருந்து மீள வேண்டாமா? அதற்கு முதலில் அவைகளை மறக்க வேண்டும். அதாவது மனதிலிருந்து அவைகளை வெளியே கொட்ட வேண்டும். ஆனால் கேட்பதற்கு யாரும் இல்லாவிட்டால் எப்படி கொட்டுவது? அதற்குத்தான் அந்த நிகழ்ச்சி. இரவு ஏழு மணிக்குத் துவங்கும். நமது நாம சங்கீர்த்தனம் போல் அவர்களது இறைவனைக் குறித்து பாடுவார்கள். பிறகு விளக்குகளில் ஒளி சிறிது சிறிதாக அருகில் இருப்பவர் முகம் சரியாகத் தெரியாதவாறு குறைப்பார்கள். உடனே நாமாவளி போல் சிலர் பாட எல்லோரும் கையைத் தூக்கி வாய்விட்டு அழுவார்களாம். பிறகு ஐந்து நிமிடம் கழித்து பாட்டு நின்றுவிடும். அடுத்த ஐந்து நிமிடம் மக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வார்களாம். பிறகு படிப்படியாக விளக்குகளின் ஒளி அதிகரிக்கும். இது போன்று ஐந்தாறு தடவை நடக்குமாம். அதில் கலந்து கொண்டபின் பலர் தங்களுடைய மனப்பாரம் குறைந்து ஆனந்தம் அடைந்துள்ளதாகக் கூறுகிறார்கள்.

ஆக, திவ்ய நாம சங்கீர்தனம் நடத்துவது, ஏதோ பொழுது போக்கு விஷயம், என்று சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள். அது நடப்பது இலவச மனஉளைச்சல் மருத்துவ முகாம் என்று கூறலாம். அதனால்தான் பலர் கஷ்டப்பட்டாவது அதை விடாமல் நடத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நடத்துகிறார்கள். அதற்கு நம்மால் முடிந்த ஆதரவை நாம் தரவேண்டும்.

பாடல் பெற்ற கோபுரம்

பொதுவாக ஆலயங்களை ஆழ்வார்களாலும் நாயன்மார்களாலும் படல் பெற்ற ஆலயங்கள் என்பார்கள். ஆனால் பாடல் பெற்ற கோபுரம் என்று ஒன்று இருக்கிறது. எங்கே தெரியுமா? நமது சென்னையில்தான்.

சென்னையில் போரூரிலிருந்து குன்றத்தூர் செல்லும் வழியில் கோவூர் என்னும் தலம் உள்ளது. இத்தலத்தில் உள்ள சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் கோபுரம்தான் பாடல் பெற்ற கோபுரம் என அழைக்கப்படுகிறது. இவ்வூரில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் கவிமாமணி சைவநெறி காவலர் கவிமாமணி சைவ இசைதாசன் அவர்கள் இக்கோவுரத்தைப் பற்றிய கவிதையை இயற்றியதால் இது பாடல் பெற்ற கோபுரமாகக் கருதப்படுகிறது. பொதுவாக கோவிலில் உறையும் இறைவனைப் பற்றி பாடல் எழுதுவார்கள். ஆனால் இவர் கோபுரத்தைப் பற்றி எழுதியுள்ளது பாராட்டத்தக்கது. அப்படி ஏன் எழுதினார் தெரியுமா?
கோவிலுக்குச் செல்லும் முன் நாம் காண்பது கோபுரத்தைத்தான். கோபுர தரிசனம் பாப விமோசனம் என்பார்கள். ஆக அப்படிப்பட்ட கோபுரத்தையும் பக்தர்கள் வணங்க வேண்டும். பாடல்களைப் பாடி வணங்கினால் இன்னும் விசேஷமாக இருக்கும். எப்படி பொருமாள் கோவிலில் கருடனுக்கும் சிவன் கோவிலில் நந்திகேஸ்வரருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதைப் போலவே கோவிலுக்குப் பெருமை சேர்க்கும் கோபுரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பது அக்கவிஞர் பொருமானின் திருவுள்ளம் போலும்.

பொதுவாக கோபுரங்களில் புராணங்களில் வரும் பாத்திரங்களின் சிற்பங்கள்தான் இருக்கும். ஆனால் இக்கோபுரத்தில் அண்மைகாலத்தில் வாழ்ந்த, சதா ராம நாமத்தையே படி வந்த சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீ தியாகராஜர் பல்லக்கில் செல்வது போல் சிற்பம் கோபுரத்தின் இருபுறமும் அமைந்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

கோவூரில் வசித்த செல்வந்தரான சுந்தரேச முதலியார் அவர்கள் ஸ்ரீ தியாகராஜரை அழைத்து வந்து இறைவனை பாடச்சொல்ல, ஸ்ரீ தியாகராஜரும் சுந்தரேஸ்வரர் மீது ஐந்து கீர்த்தனங்களை இயற்றினார். அவை கோவூர் பஞ்சரத்னம் என்று அழைக்கப்படுகிறது. அந்த பஞ்சரத்னத்தைப் பாடிவிட்டு ஸ்ரீ தியாகராஜர் கிளம்பும் பொழுது அவருடைய இராம கைங்கர்யத்திற்கு ஆயிரம் பொற்காசு பணமுடிப்பை அளித்தார். ஆனால் அதை வாங்க ஸ்வாமிகள் மறுத்துவிட்டார். பின் அவருக்குத் தெரியாமல் பல்லக்கில் மறைத்து விட்டார். பின் அதை சீடர்கள் இருவரிடம் தெரிவித்து வழியனுப்பினார்.
அவர்கள் சென்ற வழி ஒரு காடாக இருந்தது. அப்பொழுது சில திருடர்கள் அவர்களைச் சூழ்ந்து கற்களை வீசனர். சீடர்கள் அஞ்சினர். ஆனால் ஸ்வாமிகளோ, ''எதற்கு பயம்? நம்மிடம் என்ன இருக்கிறது திருடிச்செல்ல?'' என்றார். சீடர்கள் நடந்த உண்மையைக் கூற, அதற்கு ஸ்வாமிகள் ''அப்படியெனில் இது இராமனின் பணம். அவன் அதைக் காப்பாற்றிக் கொள்வான்'' என்று கூறிவிட்டார்.

அப்பொது அங்கு தோன்றிய இராம லட்சுமணர்கள் இருவரும் சேவகர்கள் போல் இருபுறமும் நின்று கொண்டு அம்பு எய்து திருடர்களை விரட்டியடித்தனர். சிறிது தூரம் சென்றதும் திருடர்கள் ஓடிவந்து ஸ்வாமிகளின் காலில் விழுந்து வணங்கி அம்பு எய்தவர்களின் அழகை வர்ணித்தனர். உடனே ஸ்வாமிகள் அவர்கள் இராம லட்சுமணர்கள்தான் என அறிந்துகொண்டு அந்த திருடர்களிடம், ''எனது இராம லட்சுமணர்களைக் காணும் பாக்கியம் பெற்ற நீங்கள் முற்பிறவியில் எவ்வளவோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஆகையால் இந்தப் பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்'' என்றார். ஆனால் திருடர்களோ அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு மனம் திருந்தி அவருடைய சீடர்களாகி பல்லக்கை சுமந்து வந்தனர்.

இந்த ஊரில் ஸ்ரீ தியாகராஜர் மூன்று நாட்கள் தங்கியிருந்து நான்கு மாட வீதிகளிலும் உஞ்சவிருத்தி பஜனை செய்துள்ளார். அவர் தங்கியிருந்த இடத்தில் இப்பொழுது தபால் அலுவலகம் உள்ளது. அவர் தம் வரலாற்று நூலில் காசியைவிட பெருமை வாய்ந்தவர் இங்கும் உறையும் ஈசன் என்று குறிப்பிட்டுள்ளதாக ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் கூறியுள்ளார்.
அதனால் கர்நாடக இசைக் கலைஞர்கள் எப்படி திருவையாற்றில் அவரது பஞ்சரத்தினக் கீர்தனைகளைப் பாடி அஞ்சலி செலுத்துகிறார்களோ, அது போல் இங்கேயும் கோவூர் பஞ்சரத்ன கீர்தனைகளைப் பாடி அஞ்சலி செலுத்த வேண்டும். அப்படி செய்தால் இந்த ஊரும் திருவையாறு போல பிரபலமாகும். நாங்க ரெடி. நீங்க?

இங்குதான் சேக்கிழார் உலகெல்லாம் உணர்ந்தோதற்கரியவன் என்று ஆரம்பிக்கும் பாடலுடன் பெரிய புராணத்தை இயற்றினார். அக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர் கோவூர் கிழார் வசித்ததும் இந்த ஊர்தான்.
இங்கு ஸ்ரீ முதளீதர ஸ்வாமிகள் ஸத்ஸங்கத்தினர் திரு. கோவூர் ஷண்முகம் தலைமையில் நாம ஸங்கீர்தனம் மற்றும் ராதா கல்யாணம் ஆகியவற்றை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

இன்னுமொரு விசேஷம், இக்கோவிலின் கோபுரம் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளது. கோவை பிரதர்ஸ் திரைப்படத்தில் வடிவேலி கிரிக்கெட் ஆடும் இடம் இந்தக் கோவிலுக்கு முன்புதான்.

வரும் இதழ்களில் இன்னும் விரிவாக விளக்கப்படும்.

சீதை இராமருடன் சென்றது ஏன்?

ராமர் வனவாசம் புறப்பட்டதும் சீதை தானும் உடன் வருவதாகக் கூறினாள். அதற்கு ராமர் மறுத்ததும், ராமர் இருக்கும் இடம்தான் தனக்கு அயோத்தி, அதனால் தானும் உடன் வருவதாகக் கூறினாள். சரி என்று இராமரும் சம்மதித்தார். இதன்படி பார்த்தால் ஊர்மிளையும் லட்சுமணனுடன் சென்றிருக்க வேண்டுமே? ஏன் செல்லவில்லை?

சீதை இராமருடன் வருகிறேன் என்பதற்கு அவர் இருக்கும் இடம்டதான் அயோத்தி என்பதல்ல. சீதை இவ்வாறு நினைத்தாளாம், ''இவர் தனக்கு பட்டாபிஷேகம் இல்லை என்றதும் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டாரா, அல்லது மனதிலேயே அந்த ஏமாற்றத்தை அடக்கிக்கொண்டுள்ளாரா என்று தெரியவில்லை. காரணம் சாதாரணமாக எடுத்துக்கொண்டிருந்தால் பரவாயில்லை. அதுவே மனதிலேயே வைத்துக் கொண்டிருந்தால் மிகவும் ஆபத்து. ஒருவன் அலுவலகத்தில் மேலதிகாரியிடம் திட்டுவாங்கியிருந்தால் அவரை எதிர்த்துப் பேசமுடியாமல் இருப்பார். அதை அடக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்ததும் சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் எரிந்து விழுவார். அதுவே பாராட்டு வாங்கியிருந்தால் வீட்டில் சந்ததோஷ மழைதான். அதாவது பட்டாசு வெடித்துவிட்டால் பரவாயில்லை. வெடிக்காவிட்டால் கிட்டே பேகலாமா, வேண்டாமா என்று குழப்பமாக இருக்கும். அதுபோல பட்டாபிஷேகம் தனக்குக் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம் அவர் மனதில் பதிந்துவிட்டால் மிகவும் ஆபத்து. காரணம் இவர் காட்டிற்கு போகும் பொழுது எதிரே ஒருவன் வந்து இவரை நலம் விசாரித்தால், 'அடப் போங்கடா, நானே பட்டாபிஷேகம் கிடைக்காம வெறுப்பில இருகிறேன். அதைப் புரிஞ்சுக்காம நீ வேற குறுக்கே வந்து நலம் விசாரிக்கிறே. போ போ' என்று எரிந்து விழுவாரோ? அப்படி எரிந்து விழுந்தால் நாம் அவரிடம் 'ஏங்க, இவனிடம் எரிந்து விழுகிறீர்கள். ராஜ சிம்மாசனம் கிடைக்காவிட்டால் என்ன? மக்களின் மனதில் கொலு வீற்றிருக்கிறீர்களே, அதைவிட ராஜ சிம்மாசனம் எந்த விதத்தில் உயர்ந்தது? நீங்களும் அது கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறீர்களே. இதோ வந்திருக்கிறான் உங்கள் உங்கள் பக்தன். அவனை காத்து ரட்சியுங்கள்' என்று சொல்லவேண்டும்''.

இப்படியாகக் கூறி, அவரை சமாதானப்படுத்தத்தான் தானும் அவருடன் வருவேன் என்று சீதை பிடிவாதம் பிடித்தார். சீதை யார்? சாட்சாத் லஷ்மி பிராட்டியார்தானே. தாயாராயிற்றே, கருணை உள்ளம் படைத்தவராயிற்றே!

திருவீதி உலாவின் முக்கியத்துவம்

இறைவனின் திருவீதி உலா என்பது எல்லா ஆலயங்களிலும் நடைபெறுகிறது. இதனுடைய முக்கியத்துவம் என்ன? பொதுவாக கூறப்படுவது என்னவெனில் வயதானவர்களால் ஆலயத்திற்குச் சென்று இறைவனை வழிபட முடியாது, அதனால் இறைவனே அவர்களுக்கு தரிசனம் தர வீதி உலா வருகிறார் என்பதே. அதுவும் ஒரு காரணம்தான். ஆனால் இந்த திருவீதி உலாவின் அடிப்படைத் தத்துவமே மக்களின் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கச் செய்வதுதான். அது எப்படியென்று சற்று விரிவாகப் பார்ப்போம்.

நல்ல ஆரோக்கியம் வேண்டுமெனில் நாம் முக்கியமாக செய்யவேண்டியது என்ன தெரியுமா? அதிக அளவில் நன்கு நடக்க வேண்டும். நடப்பது என்பது நாம் நம்மையறியாமல் செய்யக்கூடிய தேகப் பயிற்சி. இதைத்தான் மருத்துவர்களும் வலியுறுத்துகிறார்கள். ஆனால் இப்பொழுது வெகு அருகிலிருக்கும் கடைக்கு செல்வதென்றால் கூட இருசக்கர வாகனத்தில்தான் செல்கிறார்கள். சைக்கிளில் சென்றால் கூட பரவாயில்லை. காரணம் அதை ஓட்டும் பொழுது கால்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.

இறைவன் வீதி உலா வரும் பொழுது பலர் தங்கள் வீட்டு வாசலிலேயே அவரை வழிபட்டால் போதும் என்று நினைக்கிறார்கள். கூடியவரை நாமும் அவருடன் சேர்ந்து உலா வர முயற்சிக்க வேண்டும். அதைத்தான் பெருமாள் கோவில்களில் நடைபெறும் திருவீதி உலாவின் பொழுது பெருமாளுக்கு முன்னாடி நாலாயிர திவ்ய பிரபந்தங்களை சொல்லிக்கொண்டும், பின்னாடி வேதங்களை சொல்லிக் கொண்டும் பலர் செல்வார்கள். இதில் பல வயதான பெரியவர்கள் இருப்பார்கள். அதிகம் நடந்தால் தளர்ச்சி ஏற்படும். இருப்பினும் அவர்கள் இறைவனுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மனோதிடத்துடன் செல்வார்கள். அவர்கள் வயது அதிகமானால் கூட மிக ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

காஞ்சிபுரத்தில் வரதராஜப் பொருமாளின் வீதி உலா எப்படி இருக்கும் தெரியுமா? அவர் ராஜாவாயிற்றே. ஓட்டம்தான். அவருக்கு ஈடாக பெரியவர்கள் பலர் ஓடுவார்கள். காலணிகள் அணிந்து கொள்ளமாட்டார்கள். அப்பொழுது கல் எதுவும் குத்தாதா? என்று கேட்கலாம். குத்தாது. காரணம் இறைவனுக்கு சேவை செய்யும் இவர்களின் பாதங்கள் கற்களால் குத்தப்பட்டு இவர்களுக்கு துன்பம் ஏற்படக்கூடாது என்று பக்தர்கள் தெருவைச் சுந்தம் செய்து தன்ணீர் தெளித்து கோலம் போடுவார்கள். இப்படி இறைவனுக்கு சேவை செய்யும் அடியார்களுக்கு அடியார்களாக இருந்து கொண்டு தொண்டு செய்வது மிகவும் சிறப்பானது.
ஆக இறைவனின் வீதி உலாவில் நாம் கலந்து கொள்வதன் மூலம் நமது உடலுக்கு நல்லதொரு தேகப்பயிற்சியும் உள்ளத்திற்கு மகிழ்ச்சியும் கிடைக்கிறது.

அடுத்து இப்பொழுது எங்கு பார்த்தாலும் பெட்டி பெட்டியாக அடுக்கு மாடிக் கட்டிடங்கள். காற்றோட்ட வசதியே இல்லை. இதனால் ஆரோக்கியம் குறைகிறது. தெருவிற்கு வந்தால்தான் நம்மால் குளிர்ந்த மற்றும் இயற்கையான காற்றை பெற முடிகிறது. இறைவனு;ககும் அதே நிலைமைதான். ஆலயத்தில் ஒரே நெரிசலால் வரும் காற்று அவருக்குப் போவதில்லை. அதனால்தான் குளிர்ந்த காற்று வரும் நேரமான இரவு ஏழு மணிக்கு மேல் அவரே வெளியில் கிளம்பி விடுகிறார். நம்மையும் அவர் அழைக்கிறார். ஆக அவரால் நமக்கும் நல்ல காற்றை சுவாசிக்க முடிகிறது.

அடுத்து மிக முக்கியமானதொன்று. நம் நாட்டில் நாதசுர இசையை மங்கல இசை என்பார்கள். அந்த இசையின் ஒலி எங்கும் பரவ வேண்டும். அது பரவும் இடங்களிலெல்லாம் வளம் கொழிக்கும். அதனால்தான் எந்தவொரு சுப நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் நாதசுர இசை நிகழ்ச்சியை ஏற்பாடு ªச்யகின்றனர். முன்பெல்லாம் கிராமங்களில் தீபாவளியின் பொழுது அனைவருடைய வீடுகளில் மங்கலம் பொங்க வேண்டும் என்று கருதி வீடு வீடாகச் சென்று நாதசுர மேதைகள் சிறிது நேரம் நாதசுர இசை மழையைப் பொழிவார்கள்.

நாதசுர இசையின் சிறப்பு என்ன தெரியுமா? அதை உள் அரங்கத்தில் வாசிப்பதைவிட வெளியே வாசிப்பதுதான் சிறந்தது. காரணம், வித்வான்கள் எல்லாபுறமும் நாதசுரத்தை சுழற்றி சுழற்றி வாசிப்பார்கள். தவிலை உட்கார்ந்து வாசிப்பதை விட தோளில் மாட்டிக்கொண்டு வாசிப்பதுதான் வசதி. மேலும் அரங்கத்தில் ஏற்படும் எதிரொலி பிரச்சினை வெளியே இருக்காது. அதைத் தவிர வாய்ப்பாட்டுக் கச்சேரி போல் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு பாட்டை வாச்க்க வேண்டும் என்று கடடாயப்படுத்த முடியாது. அவர்களுக்கு ஆனந்தம் பெருகிவிட்டால் ஒரே பாடலை வீதி உலா முழுவதும் வாசிப்பார்கள்.
இப்படிப்பட்ட சிறப்பான நாதசுர கலையையும், வித்வான்களையும் ஊக்குவித்து ஆதரவு தருவது இந்த வீதி உலாதான்.

அடுத்து வீதி உலா களை கட்ட வேண்டுமே எப்படி? அரங்கத்தில் கச்சேரி முதலில் களை கட்டினால்தான் தொடர்ந்து ரசிகர்கள் கேட்பார்கள் என்று முதலில் வர்ணம் என்று சொல்லக்கூடிய அதிகமான ஸ்வரங்கள் அடங்கிய பாடலைப் பாடுகிறார்கள். அதுபோல் வீதி உலாவில் முதலில் மல்லாரி என்று சொல்லக்கூடிய கம்பீர நாடடை ராகத்தில் அமைந்துள்ள பல ஸ்வரங்களைக் கொண்ட பாடலை இசைப்பார்கள். இது எதற்காகவெனில் இறைவன் அமர்ந்திருக்கும் வாகனம் மிகவும் கனமாக இருக்கும். அதைத் தூக்கி தோளில் வைத்துக் கொண்டு வருபவர்களுக்கு சுமை தெரியாமல் உற்சாகம் பெருக வேண்டும் என்று இசைப்பார்கள். இராணுவ அணிவகுப்பில் பேண்ட் வாத்தியம் வாசிக்கப்பட்டு வீரர்களுக்கு உற்சாகம் அளிப்பது போல.

இந்த இசைக்கேற்றவாறு இறைவனை குலுக்கியவாறு தூக்கி வருவார்கள். இறைவன் குலுங்கி குலுங்கி வருவதும், அதற்கேற்றவாறு குடையும் குலுங்குவதும் காணக் கண்கொள்ளாக் காட்சி. இந்த நிகழ்ச்சி சுமார் அரை மணி நேரத்திற்கு மேலேயே நீடிக்கும். இதை அனுபவிப்பதற்காகவே மக்கள் வீதியுலாவில் பங்கு பெறுவர்.

இப்படி இசையைக் கேட்டும் இறைவன் வரும் அழகை ரசிப்பதிலும் மனதும், சுகமான காற்றைப் பெறுவதில் உடலும் ஆனந்தம் பெறுகின்றன. உடன் நடந்து வருவதால் நடக்கும் தேகப்பயிற்சி ஏற்பட்டு உடலுக்கு ஆரோக்கியமும் ஏற்படுகிறது. இவ்வளவு சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்த திருவீதி உலாவில் வாய்ப்பு கிட்டும்பொழுது நாமும் கலந்து கொள்ள வேண்டும். வீதி உலாவில் வரும் இறைவன் யார் என்று பார்க்கக்கூடாது. இறைவன் யார் என்பது முக்கியமல்ல. உலாவின் சுகத்தை நாம் பெற வேண்டும்.

பெரிய ஆலயங்களில் இறைவனை தூக்கி வருவதற்காக சம்பளத்திற்கு பலரை நியமித்திருந்தாலும், மக்களில் ஒரு சிலர் இறைவனுக்கு செய்யும் தொண்டாகக் கருதி தாமாக வந்து தூக்குவார்கள். ஆனால் புறநகர்ப் பகுதிகளில் அந்த நிலைமை இல்லை. தோள் கொடுத்துத் தூக்க அவ்வளவாக யாரும் முன் வருவதில்லை. அதனால் மாட்டு வண்டியில்தான் இறைவன் வீதிவுலா வருகிறார். கூடியவரை இதைத் தவிர்த்து பக்தர்களே தூக்கி வரலாம்.

இறைவனின் விக்கிரகத்தை மட்டும் மலர்களால் அலங்கரித்து தூக்கி வரச்செய்தால் கனமாக இருக்காது. மாதத்தில் ஒரு சில விசேஷ நாட்களில் நாதசுர இசையுடன் சிறிய அளவில் வீதிவுலா ஏற்பாடு செய்தால் கோவிலுக்கு நிதியை மக்கள் தாமாக முன்வந்து தருவார்கள்.

ஒரு முக்கியமான விஷயம். இறைவனை நாம் தோளில் சுமந்து வந்தாலும், அவர் நடந்து வருவதாகத்தான் கருதப்படுவார். அவர் காலணிகள் அணிந்து கொள்ள மாட்டார். அப்படி அவர் வெறும் காலுடன் வரும்பொழுது அவருடன் வரும் நாம் காலணிகளை அணியலமா? கூடாது. புறநகர் ஆலயங்களில் பலர் காலணிகளுடன் வீதி உலாவில் கலந்து கொள்கின்றனர். அது தவிர்க்கப்பட வேண்டும். இறைவன் சம்பந்தப்பட்ட அனைத்து செயல்களிலும் காலணிகள் அணியக்கூடாது. திருப்பதி மலைக்கு நடந்து செல்பவர்களும் காலணி அணியக்கூடாது. அதைத்தான் ஐயப்ப பக்தர்கள் 'கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை' என்கிறார்கள்.

ஆக, இந்த வீதி உலாவின் முக்கியத்தை அறிந்த நாம் கூடியவரை அவற்றில் கலந்து கொண்டு இறைவனின் அருளையும் ஆரோக்கிய வாழ்வையும் பெறுவோம்.

கீதை உரைப்பது என்ன?

கீதை. இந்த இரண்டு எழுத்து வார்த்தையைக் கேட்கும் பொழுதும், படிக்கும் பொழும் நமது மனது அளவிட முடியாத ஆனந்தம் அடைகிறது. அப்படி அதில் என்னதான் இருக்கிறது? என்றால் அது சாதாரண மனிதனால் எழுதப்பட்டதா என்ன? அனைத்து உலகத்தையும் காத்து அருள்பாலிக்கும் பகவான் ஸ்ரீ மஹா விஷ்ணு கிருஷ்ணராக அவதாரம் எடுத்தபொழுது அவருடைய திருவாயிலிருந்து வெளிப்பட்டதான நீண்டதொரு உபதேசமாயிற்றே.
இதன் பெருமையை யாரால் கூறமுடியும்? எந்த அளவு கூறமுடியும்? கணக்கிடவே முடியாது. இதை நாள்தோறும் படிக்க படிக்க புதியதாக சிந்தனைகள் தோன்றிக்கொண்டேயிருக்கும். மஹான்கள் இதை உபந்யாசம் செய்கையில் புதுப்புது விளக்கங்கள் அளித்துக்கொண்டேயிருப்பர். அதனால்தான் கீதை தினம் தினம் புதுப்பிறவி எடுத்துக்கொண்டேயிருக்கிறது. அதில் நேற்று அறியாத விஷயங்களை இன்று அறிகிறோம். இன்றைக்கு அறியாத விஷயங்களை நாளை அறிவோம். எத்தனைப் புத்தகங்கள் வந்தாலும் அவைகள் உடனடியாக விற்றுத் தீர்ந்து விடுகின்றன. யாரும் ''இந்த கீதையை நான் ஏற்கனவே படித்துவிட்டேன். எனக்கு வேண்டாம்'' என்று கூறுவதில்லை. அதற்குப் பதிலாக ''இந்தப்புத்தகத்தில் இன்னும் என்னென்ன விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன?'' என்று ஆவலுடன் வாங்கிப் படிக்கிறார்கள். நாவல்களை ஒரு முறைதான் படிப்பார்கள். இன்னொரு முறை படிக்கத் தூண்டாது. காரணம் நாவலின் முடிவு தெரிந்து விடும். அதனால் படிப்பதற்கு ஆர்வம் ஏற்படாது. ஆனால் புராண சம்பந்தமான நூல்களை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கத்தோன்றும். ஏனெனில் அவைகளில் உட்கருத்துக்கள் பல ஆழப்பதிந்துள்ளது. அவைகளை படிக்கப்படிக்க புதியதாக எண்ணங்கள் தோன்றிக்கொண்டேயிருக்கும்.
அப்படி புராண சம்பந்தமான நூல்கள் பல இருக்கையில் கீதைக்கு மட்டும் என்ன சிறப்பு என்று கேட்கலாம். கீதை பகவானைவிட உயர்ந்தது. உதாரணமாக திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன் டாக்டர், பத்மஸ்ரீ, செவாலியே என்ற பட்டங்களை வாங்கியஸ்ரீள்ளார். ஆனால் அவரை பொதுவாகக் குறிப்பிடும்பொழுது இந்தப்பட்டங்களின் பெயரைச் சொல்லிக் குறிப்பிடுவதில்லை. காரணம் இந்தப் பட்டங்களை மற்றவர்களும் வாங்கியுள்ளார்கள். ஆனால் யாருமே வாங்காத, இனிமேல் வாங்கமுடியாத அவருக்கென்ற உரித்த 'நடிகர் திலகம்' என்கிற பட்டப்பெயரைச் சொல்லித்தான் அழைக்கிறார்கள். ஆக அவரை விட அந்த 'நடிகர் திலகம்' என்றும் பட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் சிவாஜி கணேசன் என்று அவருடைய பெயரைக் குறிப்பிட்டுக் கூறினால் அவர் எப்படி நடித்தார், என்ன மாத்ரி வேடங்களை ஏற்றார் என்றெல்லாம் கூறவேண்டும். ஆனால் 'நடிகர் திலகம்' என்று கூறிவிட்டாலே போதும், அவரைப் பற்றி முழுமையாகச் சொன்னது போலாகிவிடும்ட. ஆக 'நடிகர் திலகம்' பட்டம்தான் அவரைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளவும் மற்ற பட்டங்களை வாங்குவதற்கும் ஆதாரமாக இருந்தது.
அதுபோல் கீதை அனைத்து வேதங்களின் சாரங்களையும் நாம் இவ்வுலகில் வாழ்வதற்குத் தேவையான நெறிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. இன்னும் சொல்லப்போனால் பகவானை நேரடியாகப் புரிந்து கொள்வதைவிட கீதை மூலம் புரிந்து கொள்வது மிக எளிது.
இதை பகவானே, ''கீதையை அண்டி நான் வாழ்கிறேன். கீதைதான் என்னுடைய சிறந்த வீடு. கீதையின் ஞானத்தைக் கொண்டு நான் மூவுலகங்களையும் காக்கின்றேன்'' என்றார்.
அது மட்டுமல்ல, அனைத்து அற நூல்களிலிருந்தும் பிழிந்தெடுக்கப்பட்ட ஒப்பற்ற சிறந்த கருப்பஞ்சாறாகக் கருதப்படுகிறது. கீதையை ஒருவன் நன்கு படித்தாலே அனைத்து அறநூல்களையும் படித்ததற்குச் சமமாகும். காரணம் இதில் ஹிந்து, கிறிஸ்துவம், இஸ்லாமியம் என்ற வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களும் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் வழி கூறப்பட்டுள்ளது. ஆக இந்நூலில் எல்லா அறநூல்களும் அடங்கிவிடுகின்றன. அதாவது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் விஸ்வரூபம் எடுத்த பொழுது அதில் அனைத்து ஈரேழு உலக ஜீவராசிகளும் தெரிந்ததாம். அதுபோல் இந்த கீதையை ஆழ்ந்து படித்தோமானால் அதில் மற்ற அறநூல்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் இருக்கும்.
இதை மீண்டும் நடிகர் திலகத்தையே உதாரணமாக வைத்து பார்க்கலாம். ஒரு நடிகர் ஒரு பேட்டியில், ''எங்களுக்கு நடிகர் திலகத்தால் ஒரு சிக்கல் ஏற்படுகிறது'' என்றார். பேட்டி கண்டவருக்கு தூக்கி வாரிப் போட்டது. பிறகு அந்த நடிகரே விளக்கினார், ''அதாவது, நடிகர் திலகம் சிவன், ஆழ்வார், நாயன்மார்கள், சுதந்திரப் போராட்ட தியாகி, சிம்மம் போல் கர்ஜிக்கும் அரசன், பாரதியார், வக்கீல், நீதிபதி, பணக்காரர், ஏழை, பாசமிகு அண்ணன், ரயில் என்ஜின் டிரைவர், ரிக்ஷாக்காரன், சங்கீதப்பாடகர், மிருதங்க வித்வான், நடனக் கலைஞர், நாதஸ்வர வித்வான், பயித்தியக்காரன், ஊமை, புலவர், நாடக நடிகன் இப்படி உலகில் உள்ள பலவிதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து அந்தப் பாத்திரங்களாகவே மாறிவிட்டார். எங்களுக்கென்று எதை விட்டுவைத்தார்? நாங்கள் எப்படி நடித்தாலும் நிச்சம் அதில் அவருடைய சாயல் இருக்கும். அவர் ஒரு நடிப்புப் புத்தகம். அதில் அனைத்து நடிகர்களின் திறமையும் அடங்கும். இப்படி அவர் எல்லாப் பாத்திரங்களையும் ஏற்று நடித்துவிட்டதால் இனி நாங்கள் புதியதாக நடிப்பதற்கென்று ஏதுமில்லை. நடிப்பு என்ற பெயரில் ஏதேதோ செய்து கொண்டிருக்கின்றோம். இதுதான் அவரால் எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினை'' என்றார்.
ஆக எப்படி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலகின் உள்ள அனைத்துவிதமான குணச்சித்திர நடிப்பிற்கு ஒரு பொதுவான புத்தகமாகத் திகழ்ந்தாரோ அதுபோல் கீதையும் அனைத்து அறநூல்களுக்கும் ஒரு பொதுவான புத்தகமாகத் திகழ்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. திருக்குறளை உலகப்பொதுமறை என்கிறார்கள். வாஸ்தவம்தான். ஆனால் அந்தத் திருக்குறளுக்கும் கீதையே அடிப்படையாகத் திகழ்கிறது. ஆக உலகப் பொதுமறை என்று தாராளமாக கீதையைக் கூறலாம். ஆனால் அது சமஸ்கிருதத்தில் இருப்பதால் சில தமிழ் அறிஞர்கள் அதை ஏற்க மாட்டார்கள். பரவாயில்லை.

சரி, கீதையை ஏன் பகவானே தன் வாயால் கூற விரும்பினார்?
மற்றவர்கள் கீதையை கூறினால் தனக்குப் பிடித்த இறைவனைப் பற்றி அதிகமாகப் புகழ்ந்து பாடுவார்கள். அந்த இறைவனே சிறந்தவர் என்று வறுவர். அதனால் மற்ற இறைவனை வணங்குபவர் கீதையை படிக்காமல் விட்டு விடுவார்கள். உதாரணமாக ஆழ்வார்கள் தாங்கள் பாடிய பாசுரங்களில் நாம் எப்படி வாழ்ந்தால் வீடுபேறு கிட்டும் என்பதை எல்லோருக்கும் பொதுவாகக் கூறியிருந்தாலும் நாராயணனே உயர்ந்தவர் என்று கூறியிருந்ததால் சிவன், முருகன் இவர்களை வழிபடுவோர் அதைப் படிக்காமல் விட்டுவிடுவர். அது போல் சிவ பக்தர்கள் பாடியிருந்தால் சிவனையே புகழ்ந்து பாடியிருப்பார்கள்இ அதனால் வைணவர்கள் அதைப் படிக்காமல் விட்டுவிடுவர். ஆகையால்தான் இந்தப் பிரச்சினை வேண்டாமென்று கடவுளே கூறிவிட்டார்.

இப்பொழுது ஒரு சந்தேகம் எழலாம். ''கடவுள் கூறிவிட்டார். அதனால் பிரச்சினையின்றி எல்லோரும் படிப்பார்கள் என்று சொன்னாலும் கூறியது ஹிந்துக்களால் வணங்கப்படும் கடவுள். அப்படியிருக்கையில் மற்ற மதத்தவர்களான கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் எப்படிப் படிப்பார்கள்? அப்படி படிக்காதபட்சத்தில் இதை எவ்வாளு உலகப்பொதுமறை நூல் என்று கூறமுடியும்?'' என்று.

இந்தப் பிரச்சினையும் வரும் என்று கடவுளுக்குத் தெரியும். அதாவது தன்னை வணங்காதவர்கள் வருங்காலத்தில் இருக்கக்கூடும். தன்னை வணங்காவிட்டாலும் தன்னுடைய இந்த கீதையை அவர்களும் படிக்க வேண்டும் என்று கருதினார். அதனால் அவர் என்ன செய்தார் என்றால் எங்கேயும் என்னை வணங்கு என்று சொல்லவில்லை. நாம் என்னென்ன கடமைகளைப் பின்பற்ற வேண்டும் என்றுதான் சொன்னார். கடமை எல்லோருக்கும் பொதுவாயிற்றே. சிவப்பு விளக்கு எரிந்தால் நிற்கவேண்டும், பச்சை விளக்கு எரிந்தால் போக வேண்டும் என்கிற கடமையை ஹிந்து, கிறிஸ்துவர், இஸ்லாமியர் இப்படி யாராக இருந்தாலும் பின்பற்ற வேண்டியதுதானே. அதனால் கடமையை பின்பற்றுவதை உரைக்கும் இந்த கீதை அனைவருக்கும் பொது என்று தாராளமாகக் கூறலாம்.

அப்படிக் கூறினாலும் இப்படியும் ஒரு கேள்வி எழ வாய்ப்புள்ளது...

''கீதையில் நான் கூறிய எந்த யோகத்தையும், அதாவது எந்த கடமையையும் பின்பற்ற முடியாவிட்டால் இறுதியல் என்னையே சரணடை'' என்று கிருஷ்ணர் கூறுகிறார். அப்படியெனில் மற்ற மதத்தினர் தங்கள் கடவுளைவிட்டு இவரை எப்படிச் சரணடைவர்? அதாவது கிறிஸ்தவர்கள் இயேசுவையும், இஸ்லாமியர்கள் அல்லாவையும்தானே வணங்குவார்கள் இல்லையா? கேள்வி சரிதானே?

இதற்கும் பதில் இருக்கிறது. பகவான் கூறுகிறார்: ''இந்த பிரபஞ்சமே எனக்குள் அடங்கியிருக்கிறது. நீ யாரை வணங்கினாலும் அது என்னைத்தான் சேரும். அதனால் உனக்கு யாரிடம் விரும்பமிருக்கிறதோ அவர்களிடமே இறுதியில் சரணடைந்துவிடு. தலைமையாசிரியரிடம்தான் பாடம் கற்கவேண்டுமென்பதில்லையே. வகுப்பாசிரியரிடமும் பாடம் கற்கலாமே'' என்று.

இதற்கு இன்னொரு விளக்கம்: டில்லியிலிருக்கும் ஒரு அன்பருக்கு கடிதம் ஒன்று அனுப்ப வேண்டும். அதை யாரிடம் கொடுத்தனுப்பவது, அப்படியே கொடுத்தாலும் அவர் அதைச் சரியாகக் கொண்டு சேர்ப்பாரா என்றெல்லாம் குழம்புகிறோம். அப்பொழுது இந்திய தபால் இலாகா என்னும் கடவுள் கூறுகிறார், ''நீ இப்படியெல்லாம் குழம்ப வேண்டாம். பேசாமல் என்னை சரணடை. அதாவது என்னிடம் அந்தப் பொறுப்பை விட்டுவிடு. நான் இந்தியா முழுவதும் பரவியிருக்கிறேன். எல்லா தபால் நிலையங்களும் என்னுள் அடக்கம். நீ டில்லிக்கு வந்துதான் இதை என்னிடம் கொடுக்க வேண்டுமென்பதில்லை. உனக்குப்பிடித்த அதாவது உன் வீட்டிற்கருகிலேயே இருக்கும் தபால்பெட்டியில் சரணடைந்து விடு. அதாவது அந்தப் பெட்டியில் போட்டுவிடு. போட்டுவிட்டு கவலையை விட்டுவிடு. பின் உனது மற்ற வேலைகளை தொடர்ந்து கவனி. எக்காரணம் கொண்டும் தபால் பெட்டியில் போடவேண்டும் என்கிற உன் கடமையை மறக்காதே. அதை நீ சரிவரச் செய்தால் அதற்குண்டான பலனைத்தருவது என் பொறுப்பு. அதாவது அந்த கடிதத்தை டில்லியில் இருப்பரிடம் நான் சேர்த்து விடுகிறேன். ஆகையால் கடமை உன்னுடையது. பலனைத் தருவது என்னுடையது''.

இதை கீதையுடன் ஒப்பிடலாம்:

தபால் இலாகா பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருப்பது
டில்லிக்கு வரவேண்டிய அவசியம் இல்லை அவரைத்தான் சரணடைய வேண்டும் என்பதில்லை. வீட்டிற்கருகிலேயே இருக்கும் தபால் பெட்டியில் போடுவது நமக்குப் பிடித்த கடவுளை சரணடைவது
போட்டுவிட்டு கவலைப்படாமல் மற்ற வேலைகளை தொடர்ந்து கவனித்தல் சரணடைந்த பின் கவலைப்படாமல் மற்ற வேலைகளை தொடர்ந்து கவனித்தல்
தபால் பெட்டியில் போட வேண்டும் என்கிற கடமையை மறக்காமலித்தல். நமக்கென்றுள்ள கடமையை சரிவரச் செய்ய மறக்காமலிருத்தல்
கடமையை சரிவரச் செய்தால் அதற்குண்டான பலனைத் தருவது என் பொறுப்பு, அதாவது அந்தக் கடிதத்தை டில்லியில் இருப்பவரிடம் நான் சேர்த்து விடுகிறேன் கடமை உன்னுடையது, பலனைத் தருவது என்னுடையது
ஆக இதன்படி கடிதத்தை வீட்டிற்கருகிலேயே இருக்கும் தபால் பெட்டியில் போட்டுவிட்டு அக்கடா என்று இருக்கிறோம். அதுதான் ஆன்மீகம். ஆன்மீகம் என்பது கடவுளை சரணடைவது மட்டுமல்ல. சரணடைந்தால் நாம் காப்பாற்றப்படுவோம் என்கிற நம்பிக்கையை கொள்வதுதான். கடவுளை வணங்கினோர் கைவிடப்படார் என்று கூறுவதில்லையே. கடவுளை நம்பினோர்தான் கைவிடப்படார் என்றுதானே கூறப்படுவது?
ஆக இந்த விளக்கத்தின் மூலம் கீதை உலகப்பொதுமறை நூல் என்றும், அனைத்து மதத்தினருக்கும் ஏற்றது என்றும் கூறுவதில் தவறில்லை என்பது நன்கு தெரிய வருகிறது.

கீதை எந்த சமயத்தில் தோன்றியது? மறு£பாரத யுத்தம் ஆரம்பிப்பதற்கு சற்று முன்தான். உற்றார், அறவினர்கள், கல்வி கற்றுத் தந்த ஆசான்கள் இவர்களை எதிர்த்தா யுத்தம் செய்வது? என்கிற தயக்கம் அர்ச்சுனனுக்கு ஏற்பட்டவுடன் கடகடவென கிருஷ்ணர் கீதையைப் பொழிந்து தள்ளிவிட்டார்.

இங்கு ஒரு சந்தேகம் எழுகிறது.

அதாவது கிருஷ்ணர் திடீரென அர்ச்சுனனை இவர்களுக்கு முன் நிறுத்தி போரிடச் சொல்லியிருந்தால் அர்ச்சுனன் கேள்வி கேட்டது சரி. ஆனால் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே இருந்த விரோதம் எல்லோரும் அறிவர். சூதாட்டத்தில் தோற்றவுடன் திரௌபதியை துகிலுரித்தபொழுது பாண்டவர்கள் கௌரவர்களை போரில் தோற்கடிப்போம் என்று சபதம் செய்தார்கள். பிதாமஹர் பீஷ்மர், குரு துரோணாச்சாரியார், கிருபாச்சார்யர் ஆகியோர் அந்த சமயத்தில் பாண்டவர்களுக்கு ஆதரவாக ஒன்றும் செய்ய முடியாமல் துரியோதனனுக்குத்தான் கட்டுப்பட்டு இருந்தார்கள். கிருஷ்ணரும் தான் பரமாத்மாவாக இருந்தாலும் இவர்களுக்காக தூது சென்று ''ஊசி முனை நிலமாவது'' என்று துரியோதனனைக் கொஞ்சினார். அவருக்கு தலையெழுத்தா என்ன இவர்களுக்காக கெஞ்ச? அதையாவது துரியோதனன் கேட்டானா? அதுமட்டுமா? துரியோதனன் அவர்களை வனவாசமும் அஞ்சாதவாசமும் செய்ய வைத்து சொல்லனா துன்பங்களைக் கொடுத்தான். அப்படியெல்லாம் நடந்த பின் போர் என்றைக்கு வரும்? நமது சபதம் எப்பொழுது நிறைவேறும் என்று பாண்டவர்கள் காத்துக் கொண்டிருக்கையில் திடீரென அர்ச்சுனனுக்கு ஏன் இவ்வாறு தயக்கம் ஏற்பட்டது?

இதற்குக் காரணம் இருக்கிறது. கடவுளின் ஒவ்வொரு செயலிலும் காரண காரியங்கள் இருக்கிறது. கடவுள் மனிதனைப் படைத்த பின் அவன் எப்படி வாழவேண்டும் என்பதை விளக்க தானே னடித்துக்காட்ட வேண்டுமென விரும்பி அவதாரங்கள் எடுத்தார். ஒவ்வொரு அவதாரமும் ஒவ்வொரு கருத்துக்களைக் கொண்டதாக இருந்தது. எல்லா கருத்துக்களையும் ஒன்று சேர்த்து கடைசி அவதாரத்தில் ஒரு தொகுப்பாகத் தரவேண்டும் என்று விரும்பினார். கடைசி அவதாரம் கல்கி அவதாரம். அதை எடுக்க பல்லாயிரக்கணக்கான வருடங்கள் பிடிக்கும். காரணம் அந்த அவதாரம் எப்பொழுது தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அப்பொழுதுதான் எடுக்கப்படவேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். அதற்குள் உலகம் அழிந்து கூட போகலாம். ஆகையால் தர்மம் அழியாமல் காக்கப்படவேண்டுமானால் உபதேசம் புரிவதை காலம் தாழ்த்தக்கூடாது என்று கருதி அதை ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ணாவதாரத்திலேயே கூறிவிடலாமென முடிவு செய்தார். அதை எந்த சமயத்தில் கூறுவது? என்று சற்று யோசித்தார். சும்மா இருக்கும் நேரத்தில் ''கடமையைச் செய், பலனை எதிர்பாராதே, என்னையே சரணடை'' என்று கூறினால் பாண்டவர்கள், ''கிருஷ்ணா, என்ன ஆச்சு உனக்கு? எங்கள் கடமையைத்தான் செய்து கொண்டிருக்கின்றோம். உன்னையேதான் சரணடைந்திருக்கின்றோம். பிறகு எதற்கு திடீரென உபதேசம் செய்கின்றாய்?'' என்று கேட்பார்கள். எதையும் காரண காரியத்துடன்தான் செய்ய வேண்டும். அதனால் அதற்கு சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருந்தார். ஆனால் சந்தர்ப்பம் சரியாகவே அமையவில்லை. யுத்தம் ஆரம்பிக்கும் நிலைமையும் வந்து விட்டது. யுத்தத்திற்கு;பபின் எத்தனை பேர் இருக்கிறார்களோ எத்தனை பேர் இறக்கிறார்களோ யார் அறிவார். அந்த சமயத்தில் அறிவுரை யாருக்குக் கூறுவது? வென்றவன் சந்தோஷத்தில் இருப்பான். உபதேசத்தைக் கேட்கும் நிலையில் இருக்க மாட்டான். தோற்றவனோ எரிச்சலில் இருப்பான். ''நன்றாகப் படி'' என்கிற உபதேசத்தை தேர்விற்கு முன்தான் கூறவேண்டும். தவிர தேர்வு முடிவுகள் வந்தபின் கூறுவதில் பலனில்லை. அது போல் யுத்தம் முடிந்தபின் அவருக்கு கீதையை உரைக்க நேரமுமட் கிடையாது. ஏனெனில் சில காலங்களில் அவதாரம் முடிந்துவிடும். அதோடு கல்கி அவதாரம்தான். கீதைக்கென்று தனி அவதாரம் எடுக்க முடியாது. அவதாரங்கள் யாவும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன்தான் இருக்க வேண்டும். அதனால்தான் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்பே கூறிவிடவேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தார். அப்படி எங்கே எந்த சூழ்நிலையில் ஆரம்பிப்பது? என்று சிந்தித்த பொழுதுதான் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்தான் சரியான நேரம் எனக் கருதினார். தாம் சொல்லப்போவது பதில். அதைக் கூறவேண்டுமென்றால் கேள்விகள் கேட்கப்பட வேண்டும். அதை யார் கேட்பது? என்று நினைத்த பொழுது நம்முடன் கூடவேயிருக்கும் அர்ச்சுனனைக் கொண்டு கேள்வி கேட்கச் செய்து விடலாம் என்று முடிவெடுத்து அவன் மனதில் தானே குடிபுகுந்து அத்தனை கேள்விகளையும் கேட்கச் செய்தார். அர்ச்சுனன் வில்லிலிருந்து அம்பு விடுவதில்தான் சிறந்தவன். மற்றபடி கீதையில் வரக்கூடிய அனைத்து கேள்விகளையும் கேட்கக்கூடிய அளவிற்கு அறிவு பெற்றவன் அல்ல. அப்படி அந்தக் கேள்விகளைக் கேட்கும் அறிவு பெற்றவனாக இருந்திருந்தால் அவன் போர் வீரனாக இருந்திருக்க மாட்டான். ஒரு பண்டிதனாக இருந்து மக்களுக்கு நீதிபோதனைகளை வழங்கிக் கொண்டிருப்பான். ஆக கேள்வி கேட்டது அர்ச்சுனன் அல்ல. இதை கீதை நல்ல முறையில் முறையாகத் தொகுக்கப்பட்டு வெளிவரவேண்டுமென்று கிருஷ்ணரே அவன் மனதிற்குள் புகுந்து கேள்விகளை கேட்கச் செய்தார். பிறகு கீதோபதேசம் முடிந்தபின் அவன் மனதிலிருந்து வெளி வந்துவிட்டார். அதற்குப் பின் அர்ச்சுனனுக்கு கீதை பற்றி அவர் சொன்னதெல்லாம் ஞாபகத்திலேயே இல்லை. அவர் சொல்படியே யுத்தம் புரிந்தான். மேலும் அவன் அன்றைய இரவு தன் சகோதரர்களுடன் பேசும் பொழுது, ''எனக்கு இன்று யுத்தம் ஆரம்டபிப்பதற்கு முன் கிருஷ்ணர் கீதோபதேசம் செய்தார்'' என்று கூறியிருக்க வேண்டும். அவர்களும், ''கிருஷ்ணா, அதை எங்களுக்கும் கூறவேண்டும்'' என்று கேட்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் மறுநாள் மேற்கொள்ளப்பட வேண்டிய போர்முறைகளைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆக, கிருஷ்ணர், ''கேள்வியும் நானே, பதிலும் நானே'' என்பதை நிரூபித்துவிட்டார்.

கோவில் + பெருமாள் கோவில் = மீஞ்சூர்

வைணவ ஆலயங்களில் கோவில் என்றால் அது திருவரங்களம் ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தையும், பெருமாள் கோவில் என்றால் அது காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் ஆலயத்தையும் குறிக்கும். திருமலை என்றால் திருவேங்கடமுடையான் கோவில் கொண்டுள்ள மேல் திருப்பதியையும் குறிக்கும். இந்த மூன்று தலங்களுக்கும் சென்னையில் உள்ளவர்களால் குறைந்த கட்டணத்தில் அடிக்கடி சென்று வர இயலாது. அந்தக் குறையைப் போக்க அந்தத் தலங்களில் உறையும் பெருமாள்கள் சென்னைக்கு அருகாமையிலேயே கோவில் கொண்டுள்ளார்கள்.

ஆம். சென்னையில் மீஞ்சூர் என்றும் தலத்தில் திருவரங்க ரங்கநாதரும், காஞ்சிபுர வரதராஜரும், திருமலைவையாவூர் தலத்தில் திருமலை வேங்கடேசப் பெருமாளும் கோவில் கொண்டுள்ளார்கள்.

இந்த இதழில் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் மற்றும் வரதராஜர் ஆலயங்களைப் பற்றிப் பார்ப்போம்.

மீஞ்சூர் இரயில் நிலையம் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே செல்லும் மார்க்கத்தில் 27 கி.மீ தொலைவில் உள்ளது. கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் இரயிலில் சென்று அதை அடையலாம். நிறைய இரயில்கள் உள்ளன. இனி ஒவ்வொரு ஆலயமாகப் பார்ப்போம்.

ஸ்ரீ ரங்க நாதர் ஆலயம்

இரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள தேவதானம் என்று அழகிய சிறு கிராமம் பச்சைப் பசேல் என்று இருக்கும் வயல்களுக்கிடையே உள்ளது. அங்கு சுமார் 1,000 வருடகாலம் பழமை வாய்ந்த கோவிலில் ஸ்ரீ ரங்கநாதர் பள்ளி கொண்ட கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
அந்த இடத்திற்குச் செல்ல இரயில் நிலையத்திற்கருகேயுள்ள மசூதியிலிருந்து ஒரு பேருந்து செல்கிறது. அது ஒரு மணி நேரத்திற்கொரு முறைதான். ஆலயம் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், பகல் 4 மணி முதல் 7 மணி வரையிலும்தான் திறந்திருக்கும். ஆகையால் போக வர ஆட்டோ வைத்துக்கொண்டுதான் செல்ல வேண்டும். தோராயமாக 120 ரூபாய் ஆகும். பிறகு பழகிவிட்டால் எப்படியாவது செல்லலாம்.

ஆலய வரலாறு

பெருமாள் பூமியை வலம் வந்து பார்க்கும் பொழுது இக்கிராமத்தில் நிறைய நெல் குவிக்கப்பட்டு அளக்கப்படாமல் இருந்ததைக் கண்டார். பின் தானே மரக்காலைக் கொண்டு நெல்லை அளந்தார். களைப்பின் மிகுதியால் அந்த மரக்காலையே தலையணையாகக் கொண்டு படுத்துக் கொண்டுவிட்டார். சாளுக்கிய மன்னன் ஒருவன் இவரை ஸ்ரீ ரங்கத்து பாவித்து ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் இந்தத் திருக்கோவிலைக் கட்டி இதற்கு வடஸ்ரீரங்கம் எனப் பெயரிட்டான். தேவர்கள் தானமாக அளித்ததால் இவ்வூருக்கு தேவதானம் என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. எங்கும் இல்லாத விசேஷமாய் ஸ்ரீ ரங்கநாதர் பதினெட்டரை அடி நீளமும் ஐந்தடி உயரமும் கொண்டு வசீகரத் தோற்றத்துடன் ஐந்து தலை ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாகத் திருமுகம் கொண்டவாறு சயனத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் புரிகிறார். பெருமாளின் திருவடிக்கும் திருமுடிக் கிரீடத்திற்கும் தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.

பெருமாளின் திருமேனி முழுவதும் சாளக்கிராமக் கலவையினால் உருவாக்கப்பட்டுள்ளது. நாபிக்கமலத்திலிருந்து பிரம்மாவும், திருவடிக்கருகே கமலம் ஏந்தி திருமகளும் (ஸ்ரீ தேவி) நீலோத்பல மலர் ஏந்தி நிலமகளும் (பூதேவி) காடசி தருகின்றனர். பெருமாளின் திருவடிக்கு நேராக சுவற்றின் வெளிப்புறத்தில் பெருமாளின் திருவடிகள் பக்தர்கள் தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்ள வசதியாகப் பொறிக்கப்பட்டுள்ளன.

திருவடிக்கு நேராக இவரை தரிசித்த விலையில் ஆஞ்சநேயரும் தும்புரு மகரிஷியும் உள்ளனர். மகரிஷியின் கையில் வீணை உள்ளது. மூலவருக்கு ரைலக்பாப்பு மட்டுமே நடைபெறுவதால் அவர் சார்பாக கீழே வைக்கப்பட்டுள்ள கௌஸ்துக பேரத்துக்கு மட்டும் அபிஷேகம் செய்யப்படுகிறது. அதற்குப் பக்கத்தில் சக்கரத்தாழ்வார் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஸமேத ரங்கநாதர் உற்சவ விக்கரகங்கள் உள்ளன.

கருவரைக்கு வெளியே ஸ்ரீ மணவாள மாமுநிகள், விஷவக்சேனர், பன்னிரு ஆழ்வார்கள், ஸ்ரீ வேதாந்த தேசிகன், ஸ்ரீ இராமாநுஜர் மற்றும் ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி ஆகியோரின் திருவுருவச் சிலைகள் உள்ளன.
பெருமாள் ஸந்நிதிக்கு வெளியே வலது புறத்தில் ஸ்ரீ ரங்கநாயகி தாயார் ஸந்நிதி பின்புறம் சக்கரத்தாழ்வார் ஸந்நிதி, நாகராஜரின் புற்று மற்றும் இடது புறத்தில் ஸ்ரீ ஆண்டாள் ஸந்நிதிக்கு நேராக கிழக்கில் ஆஞ்சநேயர் ஸந்நிதி உள்ளது. ஸ்தல விருஷமாக பாரிஜாத மரம் உள்ளது.

ஏழு சனிக்கிழமைகளில் தொடர்ந்து நெய் தீபம் ஏற்றி பெருமாளையும் புற்றில் உள்ள நாகராஜனையும் வழிபட்டு வந்தால் நினைத்த காரியங்கள் கைகூடுகின்றன. திருமணத்தடைகள் விலகுகின்றன. இங்கு வைகுண்ட ஏகாதசி, தமிழ்ப்புத்தாண்டு மற்றும் மார்கழி உற்சவம் போன்றவை சிறப்பாக நடைபெறுகிறது.

ஸ்ரீ வரதராஜர் ஆலயம்

இவ்வாலயம் இரயில் நிலையத்திற்கருகாமையிலேயே ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது. நடந்தும் போகலாம். ஆட்டோவிலும் போகலாம். 20 ரூபாய் ஆகும்.
இவ்வாலயம் காஞ்சிபுரம் வரதராஜர் ஆலயத்தைப் போலவை கட்டப்பட்டு அங்கு நடைபெறுவதைப் போலவே நிர்வாகமும் நடைபெறுகிறது.
இவ்வாலயம் நாயக்க மன்னர்களின் கட்டிடக் கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இக்கோயில் நாற்புறமும் மதில் சுவரால் சூழப்பட்டுள்ளது. கோவிலின் கருவரை பெரிய விமானத்துடன் காட்சியளிக்கிறது. கோவிலின் தென்மேற்குப்பகுதியில் ஸ்ரீ பெருந்தேவித் தாயார் ஸந்நிதியும் உள்ளது. கோவிலின் பின்புறம் விசாலமான குளம் உள்ளது. கோவிலுக்கு நேர் எதிரிரே காஞ்சியில் உள்ளது போல் ஆஞ்சநேயர் கோவிலும் உள்ளது.

உற்சவர்கள்

இவ்வாலயத்தில் சித்திரையில் சித்ரா பௌர்ணமி, வைகாசியில் பத்து நாள் பிரம்மோற்சவம், புரட்டாசியில் லட்சார்ச்சனை, கார்த்திகையில் தீபம், மார்கழியில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறப்புவிழா, போகிப்பண்டிகையின் பொழுது ஆண்டாள் திருக்கல்யாணம், தையில் சங்கராந்தி மற்றும் மாசியில் திருக்கச்சி நம்பிகளின் பத்து நாள் உற்சவமும் சிறப்பாக நடைபெறுகிறது. வைகாசி பிரம்மோற்சவம் காஞ்சியில் நடைபெறும் அதே நாட்களில் சிறப்பாக நடைபெறுகிறது.

மூன்றாம் நாள் கருட சேவை மற்றும் ஏழாம் நாள் திருத்தேர் ஆகியவற்றைக்காண பக்தர்கள் திரளாக வந்து குவிகின்றனர்.
இக்கோவிலுக்கு அருகாமையிலேயே ஏகாம்பர நாதர் ஆலயமும் காமாட்சி அம்மன் ஆலயமும் இருப்பதால் இந்த இடம் வடகாஞ்சி என்று அழைக்கப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே.
இவ்விரு ஆலயங்களைப்பற்றிய இன்னும் பல விவரங்கள் வரும் இதழ்களில் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்.

திருவரங்க வைகுண்ட ஏகாதசியும், காஞ்சிபுரத்தின் கருடசேவையும் சிறப்பு வாய்ந்ததுதான் என்றாலும், எல்லோரும் அங்கேயே சென்று அதிக நெரிசலை ஏற்படுத்தாமல் இந்த ஆலயங்களுக்கு சென்று பெருமாளை ஸேவிக்கலாமே.

ஆவடி யோக ஆஞ்சநேயர் ஆலயம்

ஆவடியில் ராமரத்னா திரை அரங்கம் அடுத்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பிற்கு செல்லும் சாலையில் சற்று தொலைவில் அமைந்துள்ளது. இது வெளியேயிருந்து பார்ப்பதற்கு வீடு போல்தான் தெரியும். சுமார் 7 வருடங்களுக்கு முன்பு இந்த வீட்டைக் கட்டும்பொழுது ஆஞ்சநேயர் யோக நிலையில் வீற்றிருக்கும்படி சுயம்புவாகத் தோன்றினார். அப்படியே அந்த வீட்டின் உரிமையாளர் அந்த இடத்தில் வீட்டைக் கட்டாமல் கோவிலாக ஆக்கிவிட்டார்.

ஒரு நீண்ட அறையில் ஆஞ்சநேயருடைய உருவம் இருக்கும். உருவம் சுமார் ஆறடி நீளமும், நான்கடி அகலமும் இருக்கும். யோக நிலையில் சாந்தமாக வீற்றிருப்பார். யோக நிலையில் வீற்றிருக்கும் தெய்வங்களை வணங்குவது மிகவும் சிறப்பு. காரணம் அவர்கள் யோக நிலையில் இருப்பது தவம் செய்வது போலாகும் அப்படி தவம் செய்யும்பொழுது நமது பிரார்த்தனையையும் சேர்த்துக் கொள்கிறார்கள். அதனால் நமது பிரார்த்தனைக்கு சிறப்புப் பலன்கள் கிட்டும். அதனால்தான் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் யோக நிலையில் இருக்கும் யோக நரஸிம்மர் சக்தி வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்.
இந்த யோக ஆஞ்சநேயரும் அப்படித்தான். பலருடைய குறைகளைத் தீர்த்து வைப்பதாக அங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர். ஆவடியில் வசிக்கும் சுப்புலட்சுமி என்பவர் தனக்கு பல கஷ்டங்கள் ஏற்பட்டதாகவும், இங்கு தொடர்ந்து வருவதால் அவைகள் நீங்கப்பெற்று மனதிற்கு சந்தோஷம் கிடைப்பதாகவும் கூறுகிறார்.

சதா இராம நாமத்தையே உச்சரிக்கும் ஆஞ்சநேயர் ஆலயத்தில் இராம நாம ஒலி எழும்பவிட்டால் நன்றாக இருக்குமா? அதனால் ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் ஆத்மார்த்த சீடரான கோவூர் ஷண்முகம் தலைமையில் சைதன்ய மஹாப்ரவு நாமபிகர கேந்த்ரா குழுவினர்ஜீ ஞாயிறு தோறும் காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை ராம நாம ஸங்கீர்த்தன ஜபம் செய்கின்றனர். '' கலியுகத்தில் நற்கதியடைய ராம நாமமே சிறந்தது. ஆகையால் அதை பட்டிதொட்டிகளிலெல்லாம் பரப்பவேண்டும்ÕÕ என்கிற ஸ்ரீ ஸ்வாமியின் கட்டளையை ஏற்று உலகம் முழுவதும் பலர் ஒன்றாகக் கூடி ஹரே ராம ஹரே கிருஷ்ண என்கிற திவ்ய நாமத்தை ஜபிக்கின்றனர். இப்படி இவர்கள் கூறும் அந்த ராமநாம ஸங்கீர்த்தனத்தினால் அங்குள்ள அந்த யோக ஆஞ்சநேயர் அகம் மகிழ்கிறார். அதனால் அவரது குறைகள் தீர தனது பிரபுவான இராமரிடன் பிரார்த்தித்துக்கொள்ள இராமரும் அக்குறைகளைத் தீர்த்து வைக்கிறார்.
இப்படிப்பபட்ட அந்த சிறப்பான யோக ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு வட இந்திய அமைப்பில் கோபுரம் கட்டப்பட்டு 19.02.2009 கும்பாபிஷேகம் ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆலயம் ஆவடியில் அமைந்திருப்பது ஆவடியைச் சுற்றியுள்ள மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். வெகு தொலைவிலிருந்தும் பலர் வருகின்றனர்.
இந்த ஆலயத்திற்கு சில திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது வெளி கேட்டிலிருந்து ஆலயத்திற்கு வரும் பாதையில் சிமெண்ட் தரையும், அந்தப் பாதையில் நிழலைத்தர கூரையும் அமைக்கப்பட வேண்டும். இதை 'சென்னை ஆலயங்கள்' இதழே வெகு விரைவில் மேற்கொள்ளும்.

உயரமான ஆஞ்சநேயர்.. காரணம் என்ன?

அன்னை சீதா தேவியைத் தேடிக் கண்டுபிடிக்க ஆஞ்சநேயர் இலங்கைக்குச் செல்ல வேண்டும் என்று இராமர் கட்டளையிட, அதை சிரமேற்கொண்டு அவரும்ட கடற்கரைக்கு வந்தார். பல மைல் தொலைவில் உள்ள இலங்கைக்கு எப்படிச் செல்வது? ஆறடி அளவுள்ள உடலை வைத்துக் கொண்டு கடலைத் தாண்ட முடியுமா? அங்கிருந்த ஜாம்பவான் ஆஞ்சநேயருக்கு அவர் மறந்து போயிருந்த சக்தியை ஞாபகப் படுத்த உடனே ஆஞ்சநேயரும் தனது உடலை பிரம்மாண்டமாக வளர்க்க கடலைத் தாண்டுவது எளிதாகப் போய்விட்டது. எப்படி உயரமாகி பிரச்சினையை சமாளித்தாரோ, அதுபோல் Ôஉங்கள் அனைத்து பிரச்னைகளையும் தீர நான் உயரமாக இருந்து அருள் புரிகிறேன்Õ என்று கூறுகிறார். அதனால் பல இடங்களில் உயரமாகக் காட்சி தருகிறார்.

ஆஞ்சநேயருக்கு ஏன் அதிக ஆலயங்கள்?

இலட்சுமணனும், ஆஞ்சநேயரும் இராமாயணத்தில் இராமருக்கு சிறந்த அளவில் கைங்கர்யம் புரிந்தனர். இலட்சுமணன் 14 வருடஙகள் மனைவியைப் பிரிந்து இராமருடன் வனவாசம் புரிந்து துளி கூட உறங்காமல் கைங்கர்யம் புரிந்தது சிறப்பானது. ஆஞ்சநேயர் பாதியில் வந்தாலும், சீதையைத் தேடிக் கண்டுபிடித்து இராமர் போரில் வெற்றி பெற உதவி புரிந்து இராம லட்சுமணர்கள் மயக்கமடைந்தபோது சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு வந்து அவர்களின் மயக்கத்தைப் போக்கினார்.

ஆக இப்படி இருவரும் சிறப்பாக கைங்கர்யம் புரிந்திருந்தாலும், ஆஞ்சநேயருக்கு மட்டும் எல்லா இடங்களிலும் கோவில்கள் உள்ளன. ஆனால் லட்சுமணனுக்கு கோவில் எதுவும் இல்லை. இருந்தால் இராமருடன் அவருடைய சந்நிதியில் இருப்பார். வட இந்தியாவில் அயோத்தியில் எங்கேயாவரு ஓரிரு இடத்தில் இருக்கலாம். ஆனால் தென்னிந்தியாவைப் பொருத்தவரை ஆஞ்சநேயருக்குததான் அதிக அளவில் ஆலயங்கள் உள்ளன. இதற்குக் காரணம் என்ன?
இலட்சுமணன் இராமரை சதா சர்வகாலமும் Ôஅண்ணா, அண்ணாÕ என்று கூறிக்கொண்டு சிறப்பான கைங்கர்யம் புரிந்தார். நாமும் அதுபோல் ராமருக்கு தம்பியாக இருந்துகொண்டு கைங்கர்யம் புரிய வேண்டுமென்றால் இப்பொழுது இராமர் நம்மிடையே இல்லை. ஆனால் ஆஞ்சநேயர் என்ன செய்தார் என்றால், 'இராமரைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்? அவர் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? அவரைவிட உயர்ந்ததான இராம மந்திரம் இருக்கிறதே, அதை சதா சர்வ காலமும் கூறுங்கள். பலன் கிட்டும். நானே அதைக் கூறித்தானே இலங்கையைக் கடந்து சென்றேன். ஆக, இராமரைக் காட்டிலும் இராம நாமம் மிக மிக உயர்ந்தது' என்று கூறி, நமக்கு சிறப்பான பொக்கிஷமான 'இராம' நாமத்தைக் காண்பித்துக் கொடுத்தார். அதாவது இலட்சுமணரும், ஆஞ்சநேயரும் கைங்கர்யம் என்னும் பாடத்தை நடத்தினர். அதில் இலட்சுமணர் வெறும் பாடத்தை மட்டும் நடத்தினார். ஆனால் ஆஞ்சநேயரோ இராம நாமம் என்னும் புத்தகத்தை அளித்துள்ளார். அதனால்தான் ஆஞ்சநேயருக்கு பல இடங்களில் கோவிலமைத்து வழிபடுகிறார்கள்.

மேலும், ஒரு சமயம் ஆஞ்சநேயரிடம் ஒரு கேள்வி வந்தது, இராம லட்சுமணர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று. உடனே தன் மார்பைக் கிழித்து தன் நெஞ்சைக் காட்டினார் ஆஞ்சநேயர். அங்கே இராமர், இலட்சுமணர், சீதை ஆகியோர் தென்பட்டனர். அதன் உட்பொருள் என்னவெனில், எங்கெல்லாம் இராம நாமம் உச்சரிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் இருப்பார். அப்படி அவர் இருந்தால் அவருடைய உள்ளத்தில் குடிகொண்டுள்ள இராம லட்சுமணர் சீதை அங்கே இருப்பார்கள். ஆக, இராமரைவிட சிறந்தது இராம நாமம் என்பதை நமக்கு எடுத்துக் காட்டிய ஆஞ்சயேயர், லட்சுமணனை விட ஒரு படி உயர்ந்து இருக்கிறார். அதனால்தான் ஆஞ்சநேயருக்கு அதிக அளவில் ஆலயங்கள் உள்ளன.

இன்னும் பல சிறப்பான காரணங்கள் இருக்கலாம். அவற்றை அறிந்தவர்கள் யாரேனும் அதை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். பிரசுரிக்கிறோம்.