கீதை உரைப்பது என்ன?

கீதை. இந்த இரண்டு எழுத்து வார்த்தையைக் கேட்கும் பொழுதும், படிக்கும் பொழும் நமது மனது அளவிட முடியாத ஆனந்தம் அடைகிறது. அப்படி அதில் என்னதான் இருக்கிறது? என்றால் அது சாதாரண மனிதனால் எழுதப்பட்டதா என்ன? அனைத்து உலகத்தையும் காத்து அருள்பாலிக்கும் பகவான் ஸ்ரீ மஹா விஷ்ணு கிருஷ்ணராக அவதாரம் எடுத்தபொழுது அவருடைய திருவாயிலிருந்து வெளிப்பட்டதான நீண்டதொரு உபதேசமாயிற்றே.
இதன் பெருமையை யாரால் கூறமுடியும்? எந்த அளவு கூறமுடியும்? கணக்கிடவே முடியாது. இதை நாள்தோறும் படிக்க படிக்க புதியதாக சிந்தனைகள் தோன்றிக்கொண்டேயிருக்கும். மஹான்கள் இதை உபந்யாசம் செய்கையில் புதுப்புது விளக்கங்கள் அளித்துக்கொண்டேயிருப்பர். அதனால்தான் கீதை தினம் தினம் புதுப்பிறவி எடுத்துக்கொண்டேயிருக்கிறது. அதில் நேற்று அறியாத விஷயங்களை இன்று அறிகிறோம். இன்றைக்கு அறியாத விஷயங்களை நாளை அறிவோம். எத்தனைப் புத்தகங்கள் வந்தாலும் அவைகள் உடனடியாக விற்றுத் தீர்ந்து விடுகின்றன. யாரும் ''இந்த கீதையை நான் ஏற்கனவே படித்துவிட்டேன். எனக்கு வேண்டாம்'' என்று கூறுவதில்லை. அதற்குப் பதிலாக ''இந்தப்புத்தகத்தில் இன்னும் என்னென்ன விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன?'' என்று ஆவலுடன் வாங்கிப் படிக்கிறார்கள். நாவல்களை ஒரு முறைதான் படிப்பார்கள். இன்னொரு முறை படிக்கத் தூண்டாது. காரணம் நாவலின் முடிவு தெரிந்து விடும். அதனால் படிப்பதற்கு ஆர்வம் ஏற்படாது. ஆனால் புராண சம்பந்தமான நூல்களை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கத்தோன்றும். ஏனெனில் அவைகளில் உட்கருத்துக்கள் பல ஆழப்பதிந்துள்ளது. அவைகளை படிக்கப்படிக்க புதியதாக எண்ணங்கள் தோன்றிக்கொண்டேயிருக்கும்.
அப்படி புராண சம்பந்தமான நூல்கள் பல இருக்கையில் கீதைக்கு மட்டும் என்ன சிறப்பு என்று கேட்கலாம். கீதை பகவானைவிட உயர்ந்தது. உதாரணமாக திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன் டாக்டர், பத்மஸ்ரீ, செவாலியே என்ற பட்டங்களை வாங்கியஸ்ரீள்ளார். ஆனால் அவரை பொதுவாகக் குறிப்பிடும்பொழுது இந்தப்பட்டங்களின் பெயரைச் சொல்லிக் குறிப்பிடுவதில்லை. காரணம் இந்தப் பட்டங்களை மற்றவர்களும் வாங்கியுள்ளார்கள். ஆனால் யாருமே வாங்காத, இனிமேல் வாங்கமுடியாத அவருக்கென்ற உரித்த 'நடிகர் திலகம்' என்கிற பட்டப்பெயரைச் சொல்லித்தான் அழைக்கிறார்கள். ஆக அவரை விட அந்த 'நடிகர் திலகம்' என்றும் பட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் சிவாஜி கணேசன் என்று அவருடைய பெயரைக் குறிப்பிட்டுக் கூறினால் அவர் எப்படி நடித்தார், என்ன மாத்ரி வேடங்களை ஏற்றார் என்றெல்லாம் கூறவேண்டும். ஆனால் 'நடிகர் திலகம்' என்று கூறிவிட்டாலே போதும், அவரைப் பற்றி முழுமையாகச் சொன்னது போலாகிவிடும்ட. ஆக 'நடிகர் திலகம்' பட்டம்தான் அவரைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளவும் மற்ற பட்டங்களை வாங்குவதற்கும் ஆதாரமாக இருந்தது.
அதுபோல் கீதை அனைத்து வேதங்களின் சாரங்களையும் நாம் இவ்வுலகில் வாழ்வதற்குத் தேவையான நெறிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. இன்னும் சொல்லப்போனால் பகவானை நேரடியாகப் புரிந்து கொள்வதைவிட கீதை மூலம் புரிந்து கொள்வது மிக எளிது.
இதை பகவானே, ''கீதையை அண்டி நான் வாழ்கிறேன். கீதைதான் என்னுடைய சிறந்த வீடு. கீதையின் ஞானத்தைக் கொண்டு நான் மூவுலகங்களையும் காக்கின்றேன்'' என்றார்.
அது மட்டுமல்ல, அனைத்து அற நூல்களிலிருந்தும் பிழிந்தெடுக்கப்பட்ட ஒப்பற்ற சிறந்த கருப்பஞ்சாறாகக் கருதப்படுகிறது. கீதையை ஒருவன் நன்கு படித்தாலே அனைத்து அறநூல்களையும் படித்ததற்குச் சமமாகும். காரணம் இதில் ஹிந்து, கிறிஸ்துவம், இஸ்லாமியம் என்ற வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களும் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் வழி கூறப்பட்டுள்ளது. ஆக இந்நூலில் எல்லா அறநூல்களும் அடங்கிவிடுகின்றன. அதாவது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் விஸ்வரூபம் எடுத்த பொழுது அதில் அனைத்து ஈரேழு உலக ஜீவராசிகளும் தெரிந்ததாம். அதுபோல் இந்த கீதையை ஆழ்ந்து படித்தோமானால் அதில் மற்ற அறநூல்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் இருக்கும்.
இதை மீண்டும் நடிகர் திலகத்தையே உதாரணமாக வைத்து பார்க்கலாம். ஒரு நடிகர் ஒரு பேட்டியில், ''எங்களுக்கு நடிகர் திலகத்தால் ஒரு சிக்கல் ஏற்படுகிறது'' என்றார். பேட்டி கண்டவருக்கு தூக்கி வாரிப் போட்டது. பிறகு அந்த நடிகரே விளக்கினார், ''அதாவது, நடிகர் திலகம் சிவன், ஆழ்வார், நாயன்மார்கள், சுதந்திரப் போராட்ட தியாகி, சிம்மம் போல் கர்ஜிக்கும் அரசன், பாரதியார், வக்கீல், நீதிபதி, பணக்காரர், ஏழை, பாசமிகு அண்ணன், ரயில் என்ஜின் டிரைவர், ரிக்ஷாக்காரன், சங்கீதப்பாடகர், மிருதங்க வித்வான், நடனக் கலைஞர், நாதஸ்வர வித்வான், பயித்தியக்காரன், ஊமை, புலவர், நாடக நடிகன் இப்படி உலகில் உள்ள பலவிதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து அந்தப் பாத்திரங்களாகவே மாறிவிட்டார். எங்களுக்கென்று எதை விட்டுவைத்தார்? நாங்கள் எப்படி நடித்தாலும் நிச்சம் அதில் அவருடைய சாயல் இருக்கும். அவர் ஒரு நடிப்புப் புத்தகம். அதில் அனைத்து நடிகர்களின் திறமையும் அடங்கும். இப்படி அவர் எல்லாப் பாத்திரங்களையும் ஏற்று நடித்துவிட்டதால் இனி நாங்கள் புதியதாக நடிப்பதற்கென்று ஏதுமில்லை. நடிப்பு என்ற பெயரில் ஏதேதோ செய்து கொண்டிருக்கின்றோம். இதுதான் அவரால் எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினை'' என்றார்.
ஆக எப்படி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலகின் உள்ள அனைத்துவிதமான குணச்சித்திர நடிப்பிற்கு ஒரு பொதுவான புத்தகமாகத் திகழ்ந்தாரோ அதுபோல் கீதையும் அனைத்து அறநூல்களுக்கும் ஒரு பொதுவான புத்தகமாகத் திகழ்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. திருக்குறளை உலகப்பொதுமறை என்கிறார்கள். வாஸ்தவம்தான். ஆனால் அந்தத் திருக்குறளுக்கும் கீதையே அடிப்படையாகத் திகழ்கிறது. ஆக உலகப் பொதுமறை என்று தாராளமாக கீதையைக் கூறலாம். ஆனால் அது சமஸ்கிருதத்தில் இருப்பதால் சில தமிழ் அறிஞர்கள் அதை ஏற்க மாட்டார்கள். பரவாயில்லை.

சரி, கீதையை ஏன் பகவானே தன் வாயால் கூற விரும்பினார்?
மற்றவர்கள் கீதையை கூறினால் தனக்குப் பிடித்த இறைவனைப் பற்றி அதிகமாகப் புகழ்ந்து பாடுவார்கள். அந்த இறைவனே சிறந்தவர் என்று வறுவர். அதனால் மற்ற இறைவனை வணங்குபவர் கீதையை படிக்காமல் விட்டு விடுவார்கள். உதாரணமாக ஆழ்வார்கள் தாங்கள் பாடிய பாசுரங்களில் நாம் எப்படி வாழ்ந்தால் வீடுபேறு கிட்டும் என்பதை எல்லோருக்கும் பொதுவாகக் கூறியிருந்தாலும் நாராயணனே உயர்ந்தவர் என்று கூறியிருந்ததால் சிவன், முருகன் இவர்களை வழிபடுவோர் அதைப் படிக்காமல் விட்டுவிடுவர். அது போல் சிவ பக்தர்கள் பாடியிருந்தால் சிவனையே புகழ்ந்து பாடியிருப்பார்கள்இ அதனால் வைணவர்கள் அதைப் படிக்காமல் விட்டுவிடுவர். ஆகையால்தான் இந்தப் பிரச்சினை வேண்டாமென்று கடவுளே கூறிவிட்டார்.

இப்பொழுது ஒரு சந்தேகம் எழலாம். ''கடவுள் கூறிவிட்டார். அதனால் பிரச்சினையின்றி எல்லோரும் படிப்பார்கள் என்று சொன்னாலும் கூறியது ஹிந்துக்களால் வணங்கப்படும் கடவுள். அப்படியிருக்கையில் மற்ற மதத்தவர்களான கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் எப்படிப் படிப்பார்கள்? அப்படி படிக்காதபட்சத்தில் இதை எவ்வாளு உலகப்பொதுமறை நூல் என்று கூறமுடியும்?'' என்று.

இந்தப் பிரச்சினையும் வரும் என்று கடவுளுக்குத் தெரியும். அதாவது தன்னை வணங்காதவர்கள் வருங்காலத்தில் இருக்கக்கூடும். தன்னை வணங்காவிட்டாலும் தன்னுடைய இந்த கீதையை அவர்களும் படிக்க வேண்டும் என்று கருதினார். அதனால் அவர் என்ன செய்தார் என்றால் எங்கேயும் என்னை வணங்கு என்று சொல்லவில்லை. நாம் என்னென்ன கடமைகளைப் பின்பற்ற வேண்டும் என்றுதான் சொன்னார். கடமை எல்லோருக்கும் பொதுவாயிற்றே. சிவப்பு விளக்கு எரிந்தால் நிற்கவேண்டும், பச்சை விளக்கு எரிந்தால் போக வேண்டும் என்கிற கடமையை ஹிந்து, கிறிஸ்துவர், இஸ்லாமியர் இப்படி யாராக இருந்தாலும் பின்பற்ற வேண்டியதுதானே. அதனால் கடமையை பின்பற்றுவதை உரைக்கும் இந்த கீதை அனைவருக்கும் பொது என்று தாராளமாகக் கூறலாம்.

அப்படிக் கூறினாலும் இப்படியும் ஒரு கேள்வி எழ வாய்ப்புள்ளது...

''கீதையில் நான் கூறிய எந்த யோகத்தையும், அதாவது எந்த கடமையையும் பின்பற்ற முடியாவிட்டால் இறுதியல் என்னையே சரணடை'' என்று கிருஷ்ணர் கூறுகிறார். அப்படியெனில் மற்ற மதத்தினர் தங்கள் கடவுளைவிட்டு இவரை எப்படிச் சரணடைவர்? அதாவது கிறிஸ்தவர்கள் இயேசுவையும், இஸ்லாமியர்கள் அல்லாவையும்தானே வணங்குவார்கள் இல்லையா? கேள்வி சரிதானே?

இதற்கும் பதில் இருக்கிறது. பகவான் கூறுகிறார்: ''இந்த பிரபஞ்சமே எனக்குள் அடங்கியிருக்கிறது. நீ யாரை வணங்கினாலும் அது என்னைத்தான் சேரும். அதனால் உனக்கு யாரிடம் விரும்பமிருக்கிறதோ அவர்களிடமே இறுதியில் சரணடைந்துவிடு. தலைமையாசிரியரிடம்தான் பாடம் கற்கவேண்டுமென்பதில்லையே. வகுப்பாசிரியரிடமும் பாடம் கற்கலாமே'' என்று.

இதற்கு இன்னொரு விளக்கம்: டில்லியிலிருக்கும் ஒரு அன்பருக்கு கடிதம் ஒன்று அனுப்ப வேண்டும். அதை யாரிடம் கொடுத்தனுப்பவது, அப்படியே கொடுத்தாலும் அவர் அதைச் சரியாகக் கொண்டு சேர்ப்பாரா என்றெல்லாம் குழம்புகிறோம். அப்பொழுது இந்திய தபால் இலாகா என்னும் கடவுள் கூறுகிறார், ''நீ இப்படியெல்லாம் குழம்ப வேண்டாம். பேசாமல் என்னை சரணடை. அதாவது என்னிடம் அந்தப் பொறுப்பை விட்டுவிடு. நான் இந்தியா முழுவதும் பரவியிருக்கிறேன். எல்லா தபால் நிலையங்களும் என்னுள் அடக்கம். நீ டில்லிக்கு வந்துதான் இதை என்னிடம் கொடுக்க வேண்டுமென்பதில்லை. உனக்குப்பிடித்த அதாவது உன் வீட்டிற்கருகிலேயே இருக்கும் தபால்பெட்டியில் சரணடைந்து விடு. அதாவது அந்தப் பெட்டியில் போட்டுவிடு. போட்டுவிட்டு கவலையை விட்டுவிடு. பின் உனது மற்ற வேலைகளை தொடர்ந்து கவனி. எக்காரணம் கொண்டும் தபால் பெட்டியில் போடவேண்டும் என்கிற உன் கடமையை மறக்காதே. அதை நீ சரிவரச் செய்தால் அதற்குண்டான பலனைத்தருவது என் பொறுப்பு. அதாவது அந்த கடிதத்தை டில்லியில் இருப்பரிடம் நான் சேர்த்து விடுகிறேன். ஆகையால் கடமை உன்னுடையது. பலனைத் தருவது என்னுடையது''.

இதை கீதையுடன் ஒப்பிடலாம்:

தபால் இலாகா பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருப்பது
டில்லிக்கு வரவேண்டிய அவசியம் இல்லை அவரைத்தான் சரணடைய வேண்டும் என்பதில்லை. வீட்டிற்கருகிலேயே இருக்கும் தபால் பெட்டியில் போடுவது நமக்குப் பிடித்த கடவுளை சரணடைவது
போட்டுவிட்டு கவலைப்படாமல் மற்ற வேலைகளை தொடர்ந்து கவனித்தல் சரணடைந்த பின் கவலைப்படாமல் மற்ற வேலைகளை தொடர்ந்து கவனித்தல்
தபால் பெட்டியில் போட வேண்டும் என்கிற கடமையை மறக்காமலித்தல். நமக்கென்றுள்ள கடமையை சரிவரச் செய்ய மறக்காமலிருத்தல்
கடமையை சரிவரச் செய்தால் அதற்குண்டான பலனைத் தருவது என் பொறுப்பு, அதாவது அந்தக் கடிதத்தை டில்லியில் இருப்பவரிடம் நான் சேர்த்து விடுகிறேன் கடமை உன்னுடையது, பலனைத் தருவது என்னுடையது
ஆக இதன்படி கடிதத்தை வீட்டிற்கருகிலேயே இருக்கும் தபால் பெட்டியில் போட்டுவிட்டு அக்கடா என்று இருக்கிறோம். அதுதான் ஆன்மீகம். ஆன்மீகம் என்பது கடவுளை சரணடைவது மட்டுமல்ல. சரணடைந்தால் நாம் காப்பாற்றப்படுவோம் என்கிற நம்பிக்கையை கொள்வதுதான். கடவுளை வணங்கினோர் கைவிடப்படார் என்று கூறுவதில்லையே. கடவுளை நம்பினோர்தான் கைவிடப்படார் என்றுதானே கூறப்படுவது?
ஆக இந்த விளக்கத்தின் மூலம் கீதை உலகப்பொதுமறை நூல் என்றும், அனைத்து மதத்தினருக்கும் ஏற்றது என்றும் கூறுவதில் தவறில்லை என்பது நன்கு தெரிய வருகிறது.

கீதை எந்த சமயத்தில் தோன்றியது? மறு£பாரத யுத்தம் ஆரம்பிப்பதற்கு சற்று முன்தான். உற்றார், அறவினர்கள், கல்வி கற்றுத் தந்த ஆசான்கள் இவர்களை எதிர்த்தா யுத்தம் செய்வது? என்கிற தயக்கம் அர்ச்சுனனுக்கு ஏற்பட்டவுடன் கடகடவென கிருஷ்ணர் கீதையைப் பொழிந்து தள்ளிவிட்டார்.

இங்கு ஒரு சந்தேகம் எழுகிறது.

அதாவது கிருஷ்ணர் திடீரென அர்ச்சுனனை இவர்களுக்கு முன் நிறுத்தி போரிடச் சொல்லியிருந்தால் அர்ச்சுனன் கேள்வி கேட்டது சரி. ஆனால் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே இருந்த விரோதம் எல்லோரும் அறிவர். சூதாட்டத்தில் தோற்றவுடன் திரௌபதியை துகிலுரித்தபொழுது பாண்டவர்கள் கௌரவர்களை போரில் தோற்கடிப்போம் என்று சபதம் செய்தார்கள். பிதாமஹர் பீஷ்மர், குரு துரோணாச்சாரியார், கிருபாச்சார்யர் ஆகியோர் அந்த சமயத்தில் பாண்டவர்களுக்கு ஆதரவாக ஒன்றும் செய்ய முடியாமல் துரியோதனனுக்குத்தான் கட்டுப்பட்டு இருந்தார்கள். கிருஷ்ணரும் தான் பரமாத்மாவாக இருந்தாலும் இவர்களுக்காக தூது சென்று ''ஊசி முனை நிலமாவது'' என்று துரியோதனனைக் கொஞ்சினார். அவருக்கு தலையெழுத்தா என்ன இவர்களுக்காக கெஞ்ச? அதையாவது துரியோதனன் கேட்டானா? அதுமட்டுமா? துரியோதனன் அவர்களை வனவாசமும் அஞ்சாதவாசமும் செய்ய வைத்து சொல்லனா துன்பங்களைக் கொடுத்தான். அப்படியெல்லாம் நடந்த பின் போர் என்றைக்கு வரும்? நமது சபதம் எப்பொழுது நிறைவேறும் என்று பாண்டவர்கள் காத்துக் கொண்டிருக்கையில் திடீரென அர்ச்சுனனுக்கு ஏன் இவ்வாறு தயக்கம் ஏற்பட்டது?

இதற்குக் காரணம் இருக்கிறது. கடவுளின் ஒவ்வொரு செயலிலும் காரண காரியங்கள் இருக்கிறது. கடவுள் மனிதனைப் படைத்த பின் அவன் எப்படி வாழவேண்டும் என்பதை விளக்க தானே னடித்துக்காட்ட வேண்டுமென விரும்பி அவதாரங்கள் எடுத்தார். ஒவ்வொரு அவதாரமும் ஒவ்வொரு கருத்துக்களைக் கொண்டதாக இருந்தது. எல்லா கருத்துக்களையும் ஒன்று சேர்த்து கடைசி அவதாரத்தில் ஒரு தொகுப்பாகத் தரவேண்டும் என்று விரும்பினார். கடைசி அவதாரம் கல்கி அவதாரம். அதை எடுக்க பல்லாயிரக்கணக்கான வருடங்கள் பிடிக்கும். காரணம் அந்த அவதாரம் எப்பொழுது தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அப்பொழுதுதான் எடுக்கப்படவேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். அதற்குள் உலகம் அழிந்து கூட போகலாம். ஆகையால் தர்மம் அழியாமல் காக்கப்படவேண்டுமானால் உபதேசம் புரிவதை காலம் தாழ்த்தக்கூடாது என்று கருதி அதை ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ணாவதாரத்திலேயே கூறிவிடலாமென முடிவு செய்தார். அதை எந்த சமயத்தில் கூறுவது? என்று சற்று யோசித்தார். சும்மா இருக்கும் நேரத்தில் ''கடமையைச் செய், பலனை எதிர்பாராதே, என்னையே சரணடை'' என்று கூறினால் பாண்டவர்கள், ''கிருஷ்ணா, என்ன ஆச்சு உனக்கு? எங்கள் கடமையைத்தான் செய்து கொண்டிருக்கின்றோம். உன்னையேதான் சரணடைந்திருக்கின்றோம். பிறகு எதற்கு திடீரென உபதேசம் செய்கின்றாய்?'' என்று கேட்பார்கள். எதையும் காரண காரியத்துடன்தான் செய்ய வேண்டும். அதனால் அதற்கு சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருந்தார். ஆனால் சந்தர்ப்பம் சரியாகவே அமையவில்லை. யுத்தம் ஆரம்பிக்கும் நிலைமையும் வந்து விட்டது. யுத்தத்திற்கு;பபின் எத்தனை பேர் இருக்கிறார்களோ எத்தனை பேர் இறக்கிறார்களோ யார் அறிவார். அந்த சமயத்தில் அறிவுரை யாருக்குக் கூறுவது? வென்றவன் சந்தோஷத்தில் இருப்பான். உபதேசத்தைக் கேட்கும் நிலையில் இருக்க மாட்டான். தோற்றவனோ எரிச்சலில் இருப்பான். ''நன்றாகப் படி'' என்கிற உபதேசத்தை தேர்விற்கு முன்தான் கூறவேண்டும். தவிர தேர்வு முடிவுகள் வந்தபின் கூறுவதில் பலனில்லை. அது போல் யுத்தம் முடிந்தபின் அவருக்கு கீதையை உரைக்க நேரமுமட் கிடையாது. ஏனெனில் சில காலங்களில் அவதாரம் முடிந்துவிடும். அதோடு கல்கி அவதாரம்தான். கீதைக்கென்று தனி அவதாரம் எடுக்க முடியாது. அவதாரங்கள் யாவும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன்தான் இருக்க வேண்டும். அதனால்தான் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்பே கூறிவிடவேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தார். அப்படி எங்கே எந்த சூழ்நிலையில் ஆரம்பிப்பது? என்று சிந்தித்த பொழுதுதான் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்தான் சரியான நேரம் எனக் கருதினார். தாம் சொல்லப்போவது பதில். அதைக் கூறவேண்டுமென்றால் கேள்விகள் கேட்கப்பட வேண்டும். அதை யார் கேட்பது? என்று நினைத்த பொழுது நம்முடன் கூடவேயிருக்கும் அர்ச்சுனனைக் கொண்டு கேள்வி கேட்கச் செய்து விடலாம் என்று முடிவெடுத்து அவன் மனதில் தானே குடிபுகுந்து அத்தனை கேள்விகளையும் கேட்கச் செய்தார். அர்ச்சுனன் வில்லிலிருந்து அம்பு விடுவதில்தான் சிறந்தவன். மற்றபடி கீதையில் வரக்கூடிய அனைத்து கேள்விகளையும் கேட்கக்கூடிய அளவிற்கு அறிவு பெற்றவன் அல்ல. அப்படி அந்தக் கேள்விகளைக் கேட்கும் அறிவு பெற்றவனாக இருந்திருந்தால் அவன் போர் வீரனாக இருந்திருக்க மாட்டான். ஒரு பண்டிதனாக இருந்து மக்களுக்கு நீதிபோதனைகளை வழங்கிக் கொண்டிருப்பான். ஆக கேள்வி கேட்டது அர்ச்சுனன் அல்ல. இதை கீதை நல்ல முறையில் முறையாகத் தொகுக்கப்பட்டு வெளிவரவேண்டுமென்று கிருஷ்ணரே அவன் மனதிற்குள் புகுந்து கேள்விகளை கேட்கச் செய்தார். பிறகு கீதோபதேசம் முடிந்தபின் அவன் மனதிலிருந்து வெளி வந்துவிட்டார். அதற்குப் பின் அர்ச்சுனனுக்கு கீதை பற்றி அவர் சொன்னதெல்லாம் ஞாபகத்திலேயே இல்லை. அவர் சொல்படியே யுத்தம் புரிந்தான். மேலும் அவன் அன்றைய இரவு தன் சகோதரர்களுடன் பேசும் பொழுது, ''எனக்கு இன்று யுத்தம் ஆரம்டபிப்பதற்கு முன் கிருஷ்ணர் கீதோபதேசம் செய்தார்'' என்று கூறியிருக்க வேண்டும். அவர்களும், ''கிருஷ்ணா, அதை எங்களுக்கும் கூறவேண்டும்'' என்று கேட்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் மறுநாள் மேற்கொள்ளப்பட வேண்டிய போர்முறைகளைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆக, கிருஷ்ணர், ''கேள்வியும் நானே, பதிலும் நானே'' என்பதை நிரூபித்துவிட்டார்.

0 comments: