ஆஞ்சநேயருக்கு ஏன் அதிக ஆலயங்கள்?

இலட்சுமணனும், ஆஞ்சநேயரும் இராமாயணத்தில் இராமருக்கு சிறந்த அளவில் கைங்கர்யம் புரிந்தனர். இலட்சுமணன் 14 வருடஙகள் மனைவியைப் பிரிந்து இராமருடன் வனவாசம் புரிந்து துளி கூட உறங்காமல் கைங்கர்யம் புரிந்தது சிறப்பானது. ஆஞ்சநேயர் பாதியில் வந்தாலும், சீதையைத் தேடிக் கண்டுபிடித்து இராமர் போரில் வெற்றி பெற உதவி புரிந்து இராம லட்சுமணர்கள் மயக்கமடைந்தபோது சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு வந்து அவர்களின் மயக்கத்தைப் போக்கினார்.

ஆக இப்படி இருவரும் சிறப்பாக கைங்கர்யம் புரிந்திருந்தாலும், ஆஞ்சநேயருக்கு மட்டும் எல்லா இடங்களிலும் கோவில்கள் உள்ளன. ஆனால் லட்சுமணனுக்கு கோவில் எதுவும் இல்லை. இருந்தால் இராமருடன் அவருடைய சந்நிதியில் இருப்பார். வட இந்தியாவில் அயோத்தியில் எங்கேயாவரு ஓரிரு இடத்தில் இருக்கலாம். ஆனால் தென்னிந்தியாவைப் பொருத்தவரை ஆஞ்சநேயருக்குததான் அதிக அளவில் ஆலயங்கள் உள்ளன. இதற்குக் காரணம் என்ன?
இலட்சுமணன் இராமரை சதா சர்வகாலமும் Ôஅண்ணா, அண்ணாÕ என்று கூறிக்கொண்டு சிறப்பான கைங்கர்யம் புரிந்தார். நாமும் அதுபோல் ராமருக்கு தம்பியாக இருந்துகொண்டு கைங்கர்யம் புரிய வேண்டுமென்றால் இப்பொழுது இராமர் நம்மிடையே இல்லை. ஆனால் ஆஞ்சநேயர் என்ன செய்தார் என்றால், 'இராமரைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்? அவர் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? அவரைவிட உயர்ந்ததான இராம மந்திரம் இருக்கிறதே, அதை சதா சர்வ காலமும் கூறுங்கள். பலன் கிட்டும். நானே அதைக் கூறித்தானே இலங்கையைக் கடந்து சென்றேன். ஆக, இராமரைக் காட்டிலும் இராம நாமம் மிக மிக உயர்ந்தது' என்று கூறி, நமக்கு சிறப்பான பொக்கிஷமான 'இராம' நாமத்தைக் காண்பித்துக் கொடுத்தார். அதாவது இலட்சுமணரும், ஆஞ்சநேயரும் கைங்கர்யம் என்னும் பாடத்தை நடத்தினர். அதில் இலட்சுமணர் வெறும் பாடத்தை மட்டும் நடத்தினார். ஆனால் ஆஞ்சநேயரோ இராம நாமம் என்னும் புத்தகத்தை அளித்துள்ளார். அதனால்தான் ஆஞ்சநேயருக்கு பல இடங்களில் கோவிலமைத்து வழிபடுகிறார்கள்.

மேலும், ஒரு சமயம் ஆஞ்சநேயரிடம் ஒரு கேள்வி வந்தது, இராம லட்சுமணர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று. உடனே தன் மார்பைக் கிழித்து தன் நெஞ்சைக் காட்டினார் ஆஞ்சநேயர். அங்கே இராமர், இலட்சுமணர், சீதை ஆகியோர் தென்பட்டனர். அதன் உட்பொருள் என்னவெனில், எங்கெல்லாம் இராம நாமம் உச்சரிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் இருப்பார். அப்படி அவர் இருந்தால் அவருடைய உள்ளத்தில் குடிகொண்டுள்ள இராம லட்சுமணர் சீதை அங்கே இருப்பார்கள். ஆக, இராமரைவிட சிறந்தது இராம நாமம் என்பதை நமக்கு எடுத்துக் காட்டிய ஆஞ்சயேயர், லட்சுமணனை விட ஒரு படி உயர்ந்து இருக்கிறார். அதனால்தான் ஆஞ்சநேயருக்கு அதிக அளவில் ஆலயங்கள் உள்ளன.

இன்னும் பல சிறப்பான காரணங்கள் இருக்கலாம். அவற்றை அறிந்தவர்கள் யாரேனும் அதை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். பிரசுரிக்கிறோம்.

0 comments: