பொதுவாக ஆலயங்களை ஆழ்வார்களாலும் நாயன்மார்களாலும் படல் பெற்ற ஆலயங்கள் என்பார்கள். ஆனால் பாடல் பெற்ற கோபுரம் என்று ஒன்று இருக்கிறது. எங்கே தெரியுமா? நமது சென்னையில்தான்.
சென்னையில் போரூரிலிருந்து குன்றத்தூர் செல்லும் வழியில் கோவூர் என்னும் தலம் உள்ளது. இத்தலத்தில் உள்ள சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் கோபுரம்தான் பாடல் பெற்ற கோபுரம் என அழைக்கப்படுகிறது. இவ்வூரில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் கவிமாமணி சைவநெறி காவலர் கவிமாமணி சைவ இசைதாசன் அவர்கள் இக்கோவுரத்தைப் பற்றிய கவிதையை இயற்றியதால் இது பாடல் பெற்ற கோபுரமாகக் கருதப்படுகிறது. பொதுவாக கோவிலில் உறையும் இறைவனைப் பற்றி பாடல் எழுதுவார்கள். ஆனால் இவர் கோபுரத்தைப் பற்றி எழுதியுள்ளது பாராட்டத்தக்கது. அப்படி ஏன் எழுதினார் தெரியுமா?
கோவிலுக்குச் செல்லும் முன் நாம் காண்பது கோபுரத்தைத்தான். கோபுர தரிசனம் பாப விமோசனம் என்பார்கள். ஆக அப்படிப்பட்ட கோபுரத்தையும் பக்தர்கள் வணங்க வேண்டும். பாடல்களைப் பாடி வணங்கினால் இன்னும் விசேஷமாக இருக்கும். எப்படி பொருமாள் கோவிலில் கருடனுக்கும் சிவன் கோவிலில் நந்திகேஸ்வரருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதைப் போலவே கோவிலுக்குப் பெருமை சேர்க்கும் கோபுரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பது அக்கவிஞர் பொருமானின் திருவுள்ளம் போலும்.
பொதுவாக கோபுரங்களில் புராணங்களில் வரும் பாத்திரங்களின் சிற்பங்கள்தான் இருக்கும். ஆனால் இக்கோபுரத்தில் அண்மைகாலத்தில் வாழ்ந்த, சதா ராம நாமத்தையே படி வந்த சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீ தியாகராஜர் பல்லக்கில் செல்வது போல் சிற்பம் கோபுரத்தின் இருபுறமும் அமைந்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
கோவூரில் வசித்த செல்வந்தரான சுந்தரேச முதலியார் அவர்கள் ஸ்ரீ தியாகராஜரை அழைத்து வந்து இறைவனை பாடச்சொல்ல, ஸ்ரீ தியாகராஜரும் சுந்தரேஸ்வரர் மீது ஐந்து கீர்த்தனங்களை இயற்றினார். அவை கோவூர் பஞ்சரத்னம் என்று அழைக்கப்படுகிறது. அந்த பஞ்சரத்னத்தைப் பாடிவிட்டு ஸ்ரீ தியாகராஜர் கிளம்பும் பொழுது அவருடைய இராம கைங்கர்யத்திற்கு ஆயிரம் பொற்காசு பணமுடிப்பை அளித்தார். ஆனால் அதை வாங்க ஸ்வாமிகள் மறுத்துவிட்டார். பின் அவருக்குத் தெரியாமல் பல்லக்கில் மறைத்து விட்டார். பின் அதை சீடர்கள் இருவரிடம் தெரிவித்து வழியனுப்பினார்.
அவர்கள் சென்ற வழி ஒரு காடாக இருந்தது. அப்பொழுது சில திருடர்கள் அவர்களைச் சூழ்ந்து கற்களை வீசனர். சீடர்கள் அஞ்சினர். ஆனால் ஸ்வாமிகளோ, ''எதற்கு பயம்? நம்மிடம் என்ன இருக்கிறது திருடிச்செல்ல?'' என்றார். சீடர்கள் நடந்த உண்மையைக் கூற, அதற்கு ஸ்வாமிகள் ''அப்படியெனில் இது இராமனின் பணம். அவன் அதைக் காப்பாற்றிக் கொள்வான்'' என்று கூறிவிட்டார்.
அப்பொது அங்கு தோன்றிய இராம லட்சுமணர்கள் இருவரும் சேவகர்கள் போல் இருபுறமும் நின்று கொண்டு அம்பு எய்து திருடர்களை விரட்டியடித்தனர். சிறிது தூரம் சென்றதும் திருடர்கள் ஓடிவந்து ஸ்வாமிகளின் காலில் விழுந்து வணங்கி அம்பு எய்தவர்களின் அழகை வர்ணித்தனர். உடனே ஸ்வாமிகள் அவர்கள் இராம லட்சுமணர்கள்தான் என அறிந்துகொண்டு அந்த திருடர்களிடம், ''எனது இராம லட்சுமணர்களைக் காணும் பாக்கியம் பெற்ற நீங்கள் முற்பிறவியில் எவ்வளவோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஆகையால் இந்தப் பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்'' என்றார். ஆனால் திருடர்களோ அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு மனம் திருந்தி அவருடைய சீடர்களாகி பல்லக்கை சுமந்து வந்தனர்.
இந்த ஊரில் ஸ்ரீ தியாகராஜர் மூன்று நாட்கள் தங்கியிருந்து நான்கு மாட வீதிகளிலும் உஞ்சவிருத்தி பஜனை செய்துள்ளார். அவர் தங்கியிருந்த இடத்தில் இப்பொழுது தபால் அலுவலகம் உள்ளது. அவர் தம் வரலாற்று நூலில் காசியைவிட பெருமை வாய்ந்தவர் இங்கும் உறையும் ஈசன் என்று குறிப்பிட்டுள்ளதாக ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் கூறியுள்ளார்.
அதனால் கர்நாடக இசைக் கலைஞர்கள் எப்படி திருவையாற்றில் அவரது பஞ்சரத்தினக் கீர்தனைகளைப் பாடி அஞ்சலி செலுத்துகிறார்களோ, அது போல் இங்கேயும் கோவூர் பஞ்சரத்ன கீர்தனைகளைப் பாடி அஞ்சலி செலுத்த வேண்டும். அப்படி செய்தால் இந்த ஊரும் திருவையாறு போல பிரபலமாகும். நாங்க ரெடி. நீங்க?
இங்குதான் சேக்கிழார் உலகெல்லாம் உணர்ந்தோதற்கரியவன் என்று ஆரம்பிக்கும் பாடலுடன் பெரிய புராணத்தை இயற்றினார். அக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர் கோவூர் கிழார் வசித்ததும் இந்த ஊர்தான்.
இங்கு ஸ்ரீ முதளீதர ஸ்வாமிகள் ஸத்ஸங்கத்தினர் திரு. கோவூர் ஷண்முகம் தலைமையில் நாம ஸங்கீர்தனம் மற்றும் ராதா கல்யாணம் ஆகியவற்றை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
இன்னுமொரு விசேஷம், இக்கோவிலின் கோபுரம் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளது. கோவை பிரதர்ஸ் திரைப்படத்தில் வடிவேலி கிரிக்கெட் ஆடும் இடம் இந்தக் கோவிலுக்கு முன்புதான்.
வரும் இதழ்களில் இன்னும் விரிவாக விளக்கப்படும்.
Labels: சுந்தரேஸ்வரர்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment