இறைவனின் திருவீதி உலா என்பது எல்லா ஆலயங்களிலும் நடைபெறுகிறது. இதனுடைய முக்கியத்துவம் என்ன? பொதுவாக கூறப்படுவது என்னவெனில் வயதானவர்களால் ஆலயத்திற்குச் சென்று இறைவனை வழிபட முடியாது, அதனால் இறைவனே அவர்களுக்கு தரிசனம் தர வீதி உலா வருகிறார் என்பதே. அதுவும் ஒரு காரணம்தான். ஆனால் இந்த திருவீதி உலாவின் அடிப்படைத் தத்துவமே மக்களின் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கச் செய்வதுதான். அது எப்படியென்று சற்று விரிவாகப் பார்ப்போம்.
நல்ல ஆரோக்கியம் வேண்டுமெனில் நாம் முக்கியமாக செய்யவேண்டியது என்ன தெரியுமா? அதிக அளவில் நன்கு நடக்க வேண்டும். நடப்பது என்பது நாம் நம்மையறியாமல் செய்யக்கூடிய தேகப் பயிற்சி. இதைத்தான் மருத்துவர்களும் வலியுறுத்துகிறார்கள். ஆனால் இப்பொழுது வெகு அருகிலிருக்கும் கடைக்கு செல்வதென்றால் கூட இருசக்கர வாகனத்தில்தான் செல்கிறார்கள். சைக்கிளில் சென்றால் கூட பரவாயில்லை. காரணம் அதை ஓட்டும் பொழுது கால்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.
இறைவன் வீதி உலா வரும் பொழுது பலர் தங்கள் வீட்டு வாசலிலேயே அவரை வழிபட்டால் போதும் என்று நினைக்கிறார்கள். கூடியவரை நாமும் அவருடன் சேர்ந்து உலா வர முயற்சிக்க வேண்டும். அதைத்தான் பெருமாள் கோவில்களில் நடைபெறும் திருவீதி உலாவின் பொழுது பெருமாளுக்கு முன்னாடி நாலாயிர திவ்ய பிரபந்தங்களை சொல்லிக்கொண்டும், பின்னாடி வேதங்களை சொல்லிக் கொண்டும் பலர் செல்வார்கள். இதில் பல வயதான பெரியவர்கள் இருப்பார்கள். அதிகம் நடந்தால் தளர்ச்சி ஏற்படும். இருப்பினும் அவர்கள் இறைவனுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மனோதிடத்துடன் செல்வார்கள். அவர்கள் வயது அதிகமானால் கூட மிக ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.
காஞ்சிபுரத்தில் வரதராஜப் பொருமாளின் வீதி உலா எப்படி இருக்கும் தெரியுமா? அவர் ராஜாவாயிற்றே. ஓட்டம்தான். அவருக்கு ஈடாக பெரியவர்கள் பலர் ஓடுவார்கள். காலணிகள் அணிந்து கொள்ளமாட்டார்கள். அப்பொழுது கல் எதுவும் குத்தாதா? என்று கேட்கலாம். குத்தாது. காரணம் இறைவனுக்கு சேவை செய்யும் இவர்களின் பாதங்கள் கற்களால் குத்தப்பட்டு இவர்களுக்கு துன்பம் ஏற்படக்கூடாது என்று பக்தர்கள் தெருவைச் சுந்தம் செய்து தன்ணீர் தெளித்து கோலம் போடுவார்கள். இப்படி இறைவனுக்கு சேவை செய்யும் அடியார்களுக்கு அடியார்களாக இருந்து கொண்டு தொண்டு செய்வது மிகவும் சிறப்பானது.
ஆக இறைவனின் வீதி உலாவில் நாம் கலந்து கொள்வதன் மூலம் நமது உடலுக்கு நல்லதொரு தேகப்பயிற்சியும் உள்ளத்திற்கு மகிழ்ச்சியும் கிடைக்கிறது.
அடுத்து இப்பொழுது எங்கு பார்த்தாலும் பெட்டி பெட்டியாக அடுக்கு மாடிக் கட்டிடங்கள். காற்றோட்ட வசதியே இல்லை. இதனால் ஆரோக்கியம் குறைகிறது. தெருவிற்கு வந்தால்தான் நம்மால் குளிர்ந்த மற்றும் இயற்கையான காற்றை பெற முடிகிறது. இறைவனு;ககும் அதே நிலைமைதான். ஆலயத்தில் ஒரே நெரிசலால் வரும் காற்று அவருக்குப் போவதில்லை. அதனால்தான் குளிர்ந்த காற்று வரும் நேரமான இரவு ஏழு மணிக்கு மேல் அவரே வெளியில் கிளம்பி விடுகிறார். நம்மையும் அவர் அழைக்கிறார். ஆக அவரால் நமக்கும் நல்ல காற்றை சுவாசிக்க முடிகிறது.
அடுத்து மிக முக்கியமானதொன்று. நம் நாட்டில் நாதசுர இசையை மங்கல இசை என்பார்கள். அந்த இசையின் ஒலி எங்கும் பரவ வேண்டும். அது பரவும் இடங்களிலெல்லாம் வளம் கொழிக்கும். அதனால்தான் எந்தவொரு சுப நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் நாதசுர இசை நிகழ்ச்சியை ஏற்பாடு ªச்யகின்றனர். முன்பெல்லாம் கிராமங்களில் தீபாவளியின் பொழுது அனைவருடைய வீடுகளில் மங்கலம் பொங்க வேண்டும் என்று கருதி வீடு வீடாகச் சென்று நாதசுர மேதைகள் சிறிது நேரம் நாதசுர இசை மழையைப் பொழிவார்கள்.
நாதசுர இசையின் சிறப்பு என்ன தெரியுமா? அதை உள் அரங்கத்தில் வாசிப்பதைவிட வெளியே வாசிப்பதுதான் சிறந்தது. காரணம், வித்வான்கள் எல்லாபுறமும் நாதசுரத்தை சுழற்றி சுழற்றி வாசிப்பார்கள். தவிலை உட்கார்ந்து வாசிப்பதை விட தோளில் மாட்டிக்கொண்டு வாசிப்பதுதான் வசதி. மேலும் அரங்கத்தில் ஏற்படும் எதிரொலி பிரச்சினை வெளியே இருக்காது. அதைத் தவிர வாய்ப்பாட்டுக் கச்சேரி போல் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு பாட்டை வாச்க்க வேண்டும் என்று கடடாயப்படுத்த முடியாது. அவர்களுக்கு ஆனந்தம் பெருகிவிட்டால் ஒரே பாடலை வீதி உலா முழுவதும் வாசிப்பார்கள்.
இப்படிப்பட்ட சிறப்பான நாதசுர கலையையும், வித்வான்களையும் ஊக்குவித்து ஆதரவு தருவது இந்த வீதி உலாதான்.
அடுத்து வீதி உலா களை கட்ட வேண்டுமே எப்படி? அரங்கத்தில் கச்சேரி முதலில் களை கட்டினால்தான் தொடர்ந்து ரசிகர்கள் கேட்பார்கள் என்று முதலில் வர்ணம் என்று சொல்லக்கூடிய அதிகமான ஸ்வரங்கள் அடங்கிய பாடலைப் பாடுகிறார்கள். அதுபோல் வீதி உலாவில் முதலில் மல்லாரி என்று சொல்லக்கூடிய கம்பீர நாடடை ராகத்தில் அமைந்துள்ள பல ஸ்வரங்களைக் கொண்ட பாடலை இசைப்பார்கள். இது எதற்காகவெனில் இறைவன் அமர்ந்திருக்கும் வாகனம் மிகவும் கனமாக இருக்கும். அதைத் தூக்கி தோளில் வைத்துக் கொண்டு வருபவர்களுக்கு சுமை தெரியாமல் உற்சாகம் பெருக வேண்டும் என்று இசைப்பார்கள். இராணுவ அணிவகுப்பில் பேண்ட் வாத்தியம் வாசிக்கப்பட்டு வீரர்களுக்கு உற்சாகம் அளிப்பது போல.
இந்த இசைக்கேற்றவாறு இறைவனை குலுக்கியவாறு தூக்கி வருவார்கள். இறைவன் குலுங்கி குலுங்கி வருவதும், அதற்கேற்றவாறு குடையும் குலுங்குவதும் காணக் கண்கொள்ளாக் காட்சி. இந்த நிகழ்ச்சி சுமார் அரை மணி நேரத்திற்கு மேலேயே நீடிக்கும். இதை அனுபவிப்பதற்காகவே மக்கள் வீதியுலாவில் பங்கு பெறுவர்.
இப்படி இசையைக் கேட்டும் இறைவன் வரும் அழகை ரசிப்பதிலும் மனதும், சுகமான காற்றைப் பெறுவதில் உடலும் ஆனந்தம் பெறுகின்றன. உடன் நடந்து வருவதால் நடக்கும் தேகப்பயிற்சி ஏற்பட்டு உடலுக்கு ஆரோக்கியமும் ஏற்படுகிறது. இவ்வளவு சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்த திருவீதி உலாவில் வாய்ப்பு கிட்டும்பொழுது நாமும் கலந்து கொள்ள வேண்டும். வீதி உலாவில் வரும் இறைவன் யார் என்று பார்க்கக்கூடாது. இறைவன் யார் என்பது முக்கியமல்ல. உலாவின் சுகத்தை நாம் பெற வேண்டும்.
பெரிய ஆலயங்களில் இறைவனை தூக்கி வருவதற்காக சம்பளத்திற்கு பலரை நியமித்திருந்தாலும், மக்களில் ஒரு சிலர் இறைவனுக்கு செய்யும் தொண்டாகக் கருதி தாமாக வந்து தூக்குவார்கள். ஆனால் புறநகர்ப் பகுதிகளில் அந்த நிலைமை இல்லை. தோள் கொடுத்துத் தூக்க அவ்வளவாக யாரும் முன் வருவதில்லை. அதனால் மாட்டு வண்டியில்தான் இறைவன் வீதிவுலா வருகிறார். கூடியவரை இதைத் தவிர்த்து பக்தர்களே தூக்கி வரலாம்.
இறைவனின் விக்கிரகத்தை மட்டும் மலர்களால் அலங்கரித்து தூக்கி வரச்செய்தால் கனமாக இருக்காது. மாதத்தில் ஒரு சில விசேஷ நாட்களில் நாதசுர இசையுடன் சிறிய அளவில் வீதிவுலா ஏற்பாடு செய்தால் கோவிலுக்கு நிதியை மக்கள் தாமாக முன்வந்து தருவார்கள்.
ஒரு முக்கியமான விஷயம். இறைவனை நாம் தோளில் சுமந்து வந்தாலும், அவர் நடந்து வருவதாகத்தான் கருதப்படுவார். அவர் காலணிகள் அணிந்து கொள்ள மாட்டார். அப்படி அவர் வெறும் காலுடன் வரும்பொழுது அவருடன் வரும் நாம் காலணிகளை அணியலமா? கூடாது. புறநகர் ஆலயங்களில் பலர் காலணிகளுடன் வீதி உலாவில் கலந்து கொள்கின்றனர். அது தவிர்க்கப்பட வேண்டும். இறைவன் சம்பந்தப்பட்ட அனைத்து செயல்களிலும் காலணிகள் அணியக்கூடாது. திருப்பதி மலைக்கு நடந்து செல்பவர்களும் காலணி அணியக்கூடாது. அதைத்தான் ஐயப்ப பக்தர்கள் 'கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை' என்கிறார்கள்.
ஆக, இந்த வீதி உலாவின் முக்கியத்தை அறிந்த நாம் கூடியவரை அவற்றில் கலந்து கொண்டு இறைவனின் அருளையும் ஆரோக்கிய வாழ்வையும் பெறுவோம்.
Labels: திருவீதி உலா
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment