ஆவடியில் ராமரத்னா திரை அரங்கம் அடுத்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பிற்கு செல்லும் சாலையில் சற்று தொலைவில் அமைந்துள்ளது. இது வெளியேயிருந்து பார்ப்பதற்கு வீடு போல்தான் தெரியும். சுமார் 7 வருடங்களுக்கு முன்பு இந்த வீட்டைக் கட்டும்பொழுது ஆஞ்சநேயர் யோக நிலையில் வீற்றிருக்கும்படி சுயம்புவாகத் தோன்றினார். அப்படியே அந்த வீட்டின் உரிமையாளர் அந்த இடத்தில் வீட்டைக் கட்டாமல் கோவிலாக ஆக்கிவிட்டார்.
ஒரு நீண்ட அறையில் ஆஞ்சநேயருடைய உருவம் இருக்கும். உருவம் சுமார் ஆறடி நீளமும், நான்கடி அகலமும் இருக்கும். யோக நிலையில் சாந்தமாக வீற்றிருப்பார். யோக நிலையில் வீற்றிருக்கும் தெய்வங்களை வணங்குவது மிகவும் சிறப்பு. காரணம் அவர்கள் யோக நிலையில் இருப்பது தவம் செய்வது போலாகும் அப்படி தவம் செய்யும்பொழுது நமது பிரார்த்தனையையும் சேர்த்துக் கொள்கிறார்கள். அதனால் நமது பிரார்த்தனைக்கு சிறப்புப் பலன்கள் கிட்டும். அதனால்தான் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் யோக நிலையில் இருக்கும் யோக நரஸிம்மர் சக்தி வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்.
இந்த யோக ஆஞ்சநேயரும் அப்படித்தான். பலருடைய குறைகளைத் தீர்த்து வைப்பதாக அங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர். ஆவடியில் வசிக்கும் சுப்புலட்சுமி என்பவர் தனக்கு பல கஷ்டங்கள் ஏற்பட்டதாகவும், இங்கு தொடர்ந்து வருவதால் அவைகள் நீங்கப்பெற்று மனதிற்கு சந்தோஷம் கிடைப்பதாகவும் கூறுகிறார்.
சதா இராம நாமத்தையே உச்சரிக்கும் ஆஞ்சநேயர் ஆலயத்தில் இராம நாம ஒலி எழும்பவிட்டால் நன்றாக இருக்குமா? அதனால் ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் ஆத்மார்த்த சீடரான கோவூர் ஷண்முகம் தலைமையில் சைதன்ய மஹாப்ரவு நாமபிகர கேந்த்ரா குழுவினர்ஜீ ஞாயிறு தோறும் காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை ராம நாம ஸங்கீர்த்தன ஜபம் செய்கின்றனர். '' கலியுகத்தில் நற்கதியடைய ராம நாமமே சிறந்தது. ஆகையால் அதை பட்டிதொட்டிகளிலெல்லாம் பரப்பவேண்டும்ÕÕ என்கிற ஸ்ரீ ஸ்வாமியின் கட்டளையை ஏற்று உலகம் முழுவதும் பலர் ஒன்றாகக் கூடி ஹரே ராம ஹரே கிருஷ்ண என்கிற திவ்ய நாமத்தை ஜபிக்கின்றனர். இப்படி இவர்கள் கூறும் அந்த ராமநாம ஸங்கீர்த்தனத்தினால் அங்குள்ள அந்த யோக ஆஞ்சநேயர் அகம் மகிழ்கிறார். அதனால் அவரது குறைகள் தீர தனது பிரபுவான இராமரிடன் பிரார்த்தித்துக்கொள்ள இராமரும் அக்குறைகளைத் தீர்த்து வைக்கிறார்.
இப்படிப்பபட்ட அந்த சிறப்பான யோக ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு வட இந்திய அமைப்பில் கோபுரம் கட்டப்பட்டு 19.02.2009 கும்பாபிஷேகம் ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆலயம் ஆவடியில் அமைந்திருப்பது ஆவடியைச் சுற்றியுள்ள மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். வெகு தொலைவிலிருந்தும் பலர் வருகின்றனர்.
இந்த ஆலயத்திற்கு சில திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது வெளி கேட்டிலிருந்து ஆலயத்திற்கு வரும் பாதையில் சிமெண்ட் தரையும், அந்தப் பாதையில் நிழலைத்தர கூரையும் அமைக்கப்பட வேண்டும். இதை 'சென்னை ஆலயங்கள்' இதழே வெகு விரைவில் மேற்கொள்ளும்.
Labels: ஆஞ்சநேயர்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment