வைணவ ஆலயங்களில் கோவில் என்றால் அது திருவரங்களம் ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தையும், பெருமாள் கோவில் என்றால் அது காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் ஆலயத்தையும் குறிக்கும். திருமலை என்றால் திருவேங்கடமுடையான் கோவில் கொண்டுள்ள மேல் திருப்பதியையும் குறிக்கும். இந்த மூன்று தலங்களுக்கும் சென்னையில் உள்ளவர்களால் குறைந்த கட்டணத்தில் அடிக்கடி சென்று வர இயலாது. அந்தக் குறையைப் போக்க அந்தத் தலங்களில் உறையும் பெருமாள்கள் சென்னைக்கு அருகாமையிலேயே கோவில் கொண்டுள்ளார்கள்.
ஆம். சென்னையில் மீஞ்சூர் என்றும் தலத்தில் திருவரங்க ரங்கநாதரும், காஞ்சிபுர வரதராஜரும், திருமலைவையாவூர் தலத்தில் திருமலை வேங்கடேசப் பெருமாளும் கோவில் கொண்டுள்ளார்கள்.
இந்த இதழில் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் மற்றும் வரதராஜர் ஆலயங்களைப் பற்றிப் பார்ப்போம்.
மீஞ்சூர் இரயில் நிலையம் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே செல்லும் மார்க்கத்தில் 27 கி.மீ தொலைவில் உள்ளது. கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் இரயிலில் சென்று அதை அடையலாம். நிறைய இரயில்கள் உள்ளன. இனி ஒவ்வொரு ஆலயமாகப் பார்ப்போம்.
ஸ்ரீ ரங்க நாதர் ஆலயம்
இரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள தேவதானம் என்று அழகிய சிறு கிராமம் பச்சைப் பசேல் என்று இருக்கும் வயல்களுக்கிடையே உள்ளது. அங்கு சுமார் 1,000 வருடகாலம் பழமை வாய்ந்த கோவிலில் ஸ்ரீ ரங்கநாதர் பள்ளி கொண்ட கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
அந்த இடத்திற்குச் செல்ல இரயில் நிலையத்திற்கருகேயுள்ள மசூதியிலிருந்து ஒரு பேருந்து செல்கிறது. அது ஒரு மணி நேரத்திற்கொரு முறைதான். ஆலயம் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், பகல் 4 மணி முதல் 7 மணி வரையிலும்தான் திறந்திருக்கும். ஆகையால் போக வர ஆட்டோ வைத்துக்கொண்டுதான் செல்ல வேண்டும். தோராயமாக 120 ரூபாய் ஆகும். பிறகு பழகிவிட்டால் எப்படியாவது செல்லலாம்.
ஆலய வரலாறு
பெருமாள் பூமியை வலம் வந்து பார்க்கும் பொழுது இக்கிராமத்தில் நிறைய நெல் குவிக்கப்பட்டு அளக்கப்படாமல் இருந்ததைக் கண்டார். பின் தானே மரக்காலைக் கொண்டு நெல்லை அளந்தார். களைப்பின் மிகுதியால் அந்த மரக்காலையே தலையணையாகக் கொண்டு படுத்துக் கொண்டுவிட்டார். சாளுக்கிய மன்னன் ஒருவன் இவரை ஸ்ரீ ரங்கத்து பாவித்து ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் இந்தத் திருக்கோவிலைக் கட்டி இதற்கு வடஸ்ரீரங்கம் எனப் பெயரிட்டான். தேவர்கள் தானமாக அளித்ததால் இவ்வூருக்கு தேவதானம் என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. எங்கும் இல்லாத விசேஷமாய் ஸ்ரீ ரங்கநாதர் பதினெட்டரை அடி நீளமும் ஐந்தடி உயரமும் கொண்டு வசீகரத் தோற்றத்துடன் ஐந்து தலை ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாகத் திருமுகம் கொண்டவாறு சயனத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் புரிகிறார். பெருமாளின் திருவடிக்கும் திருமுடிக் கிரீடத்திற்கும் தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.
பெருமாளின் திருமேனி முழுவதும் சாளக்கிராமக் கலவையினால் உருவாக்கப்பட்டுள்ளது. நாபிக்கமலத்திலிருந்து பிரம்மாவும், திருவடிக்கருகே கமலம் ஏந்தி திருமகளும் (ஸ்ரீ தேவி) நீலோத்பல மலர் ஏந்தி நிலமகளும் (பூதேவி) காடசி தருகின்றனர். பெருமாளின் திருவடிக்கு நேராக சுவற்றின் வெளிப்புறத்தில் பெருமாளின் திருவடிகள் பக்தர்கள் தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்ள வசதியாகப் பொறிக்கப்பட்டுள்ளன.
திருவடிக்கு நேராக இவரை தரிசித்த விலையில் ஆஞ்சநேயரும் தும்புரு மகரிஷியும் உள்ளனர். மகரிஷியின் கையில் வீணை உள்ளது. மூலவருக்கு ரைலக்பாப்பு மட்டுமே நடைபெறுவதால் அவர் சார்பாக கீழே வைக்கப்பட்டுள்ள கௌஸ்துக பேரத்துக்கு மட்டும் அபிஷேகம் செய்யப்படுகிறது. அதற்குப் பக்கத்தில் சக்கரத்தாழ்வார் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஸமேத ரங்கநாதர் உற்சவ விக்கரகங்கள் உள்ளன.
கருவரைக்கு வெளியே ஸ்ரீ மணவாள மாமுநிகள், விஷவக்சேனர், பன்னிரு ஆழ்வார்கள், ஸ்ரீ வேதாந்த தேசிகன், ஸ்ரீ இராமாநுஜர் மற்றும் ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி ஆகியோரின் திருவுருவச் சிலைகள் உள்ளன.
பெருமாள் ஸந்நிதிக்கு வெளியே வலது புறத்தில் ஸ்ரீ ரங்கநாயகி தாயார் ஸந்நிதி பின்புறம் சக்கரத்தாழ்வார் ஸந்நிதி, நாகராஜரின் புற்று மற்றும் இடது புறத்தில் ஸ்ரீ ஆண்டாள் ஸந்நிதிக்கு நேராக கிழக்கில் ஆஞ்சநேயர் ஸந்நிதி உள்ளது. ஸ்தல விருஷமாக பாரிஜாத மரம் உள்ளது.
ஏழு சனிக்கிழமைகளில் தொடர்ந்து நெய் தீபம் ஏற்றி பெருமாளையும் புற்றில் உள்ள நாகராஜனையும் வழிபட்டு வந்தால் நினைத்த காரியங்கள் கைகூடுகின்றன. திருமணத்தடைகள் விலகுகின்றன. இங்கு வைகுண்ட ஏகாதசி, தமிழ்ப்புத்தாண்டு மற்றும் மார்கழி உற்சவம் போன்றவை சிறப்பாக நடைபெறுகிறது.
ஸ்ரீ வரதராஜர் ஆலயம்
இவ்வாலயம் இரயில் நிலையத்திற்கருகாமையிலேயே ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது. நடந்தும் போகலாம். ஆட்டோவிலும் போகலாம். 20 ரூபாய் ஆகும்.
இவ்வாலயம் காஞ்சிபுரம் வரதராஜர் ஆலயத்தைப் போலவை கட்டப்பட்டு அங்கு நடைபெறுவதைப் போலவே நிர்வாகமும் நடைபெறுகிறது.
இவ்வாலயம் நாயக்க மன்னர்களின் கட்டிடக் கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இக்கோயில் நாற்புறமும் மதில் சுவரால் சூழப்பட்டுள்ளது. கோவிலின் கருவரை பெரிய விமானத்துடன் காட்சியளிக்கிறது. கோவிலின் தென்மேற்குப்பகுதியில் ஸ்ரீ பெருந்தேவித் தாயார் ஸந்நிதியும் உள்ளது. கோவிலின் பின்புறம் விசாலமான குளம் உள்ளது. கோவிலுக்கு நேர் எதிரிரே காஞ்சியில் உள்ளது போல் ஆஞ்சநேயர் கோவிலும் உள்ளது.
உற்சவர்கள்
இவ்வாலயத்தில் சித்திரையில் சித்ரா பௌர்ணமி, வைகாசியில் பத்து நாள் பிரம்மோற்சவம், புரட்டாசியில் லட்சார்ச்சனை, கார்த்திகையில் தீபம், மார்கழியில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறப்புவிழா, போகிப்பண்டிகையின் பொழுது ஆண்டாள் திருக்கல்யாணம், தையில் சங்கராந்தி மற்றும் மாசியில் திருக்கச்சி நம்பிகளின் பத்து நாள் உற்சவமும் சிறப்பாக நடைபெறுகிறது. வைகாசி பிரம்மோற்சவம் காஞ்சியில் நடைபெறும் அதே நாட்களில் சிறப்பாக நடைபெறுகிறது.
மூன்றாம் நாள் கருட சேவை மற்றும் ஏழாம் நாள் திருத்தேர் ஆகியவற்றைக்காண பக்தர்கள் திரளாக வந்து குவிகின்றனர்.
இக்கோவிலுக்கு அருகாமையிலேயே ஏகாம்பர நாதர் ஆலயமும் காமாட்சி அம்மன் ஆலயமும் இருப்பதால் இந்த இடம் வடகாஞ்சி என்று அழைக்கப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே.
இவ்விரு ஆலயங்களைப்பற்றிய இன்னும் பல விவரங்கள் வரும் இதழ்களில் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்.
திருவரங்க வைகுண்ட ஏகாதசியும், காஞ்சிபுரத்தின் கருடசேவையும் சிறப்பு வாய்ந்ததுதான் என்றாலும், எல்லோரும் அங்கேயே சென்று அதிக நெரிசலை ஏற்படுத்தாமல் இந்த ஆலயங்களுக்கு சென்று பெருமாளை ஸேவிக்கலாமே.
Labels: பெருமாள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment